Published : 13 Mar 2021 03:14 AM
Last Updated : 13 Mar 2021 03:14 AM
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்தசட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்ற அதே தொகுதிகளில் திமுக,காங்கிரஸ் கட்சிகள் மீண்டும் போட்டியிடுகின்றன. திமுகவில் தற்போதைய எம்.எல்.ஏ.க்கள் சுரேஷ்ராஜன், ஆஸ்டின், மனோதங்கராஜ் ஆகியோருக்கே மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் அதிமுக கூட்டணியில் கன்னியாகுமரி மற்றும் பத்மநாபபுரத்தில் அதிமுக, கிள்ளியூரில் தமாகா, நாகர்கோவில், குளச்சல், விளவங்கோடு ஆகிய தொகுதிகளில் பாஜக போட்டியிடுகிறது.
அதேநேரம், திமுக கூட்டணியில் கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்ற அதே தொகுதிகள் அதே கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. காங்கிரஸ் வெற்றி பெற்ற குளச்சல், கிள்ளியூர், விளவங்கோடு ஆகிய 3 தொகுதிகளும் மீண்டும் காங்கிரஸுக்கே ஒதுக்கப்பட்டுள்ளன. இதுவரை வேட்பாளர்கள் அறிவிக்கப்படாத நிலையில், இப்போதைய எம்எல்ஏக்களே அந்தந்த தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பு அதிகம் உள்ளது.
திமுக எம்எல்ஏக்களான சுரேஷ்ராஜன் நாகர்கோவிலிலும், ஆஸ்டின் கன்னியாகுமரியிலும், மனோதங்கராஜ் பத்மநாபபுரத்திலும் மீண்டும் போட்டியிடுகின்றனர்.
நாகர்கோவில் திமுக வேட்பாளர் சுரேஷ்ராஜன் குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளராக உள்ளார். 58 வயதான இவர் ராமவர்மபுரத்தில் வசித்து வருகிறார். 1996 முதல் 2001 வரை சுற்றுலாத்துறை அமைச்சராகவும், 2006 முதல் 2011 வரை சுற்றுலாமற்றும் பத்திரப்பதிவு அமைச்சராகவும் இருந்தார். 2016-ம் ஆண்டு நாகர்கோவில்தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்
கன்னியாகுமரியில் திமுக எம்எல்ஏ ஆஸ்டின் மீண்டும் போட்டியிடுகிறார். கடந்தமுறையைப் போலவே அதிமுகவேட்பாளர் தளவாய் சுந்தரத்துடன் களம்காணவுள்ளார். சியோன்புரத்தில் வசிக்கிறார். வயது 61. திருமணமாகவில்லை. 1992-ல் நாடாளுமன்ற மேலவை உறுப்பினராகவும், 2001-ல் நாகர்கோவில் எம்எல்ஏவாகவும் இருந்துள்ளார். அதிமுக, தேமுதிகவில் செல்வாக்குடன் இருந்த இவர், பின்னர் திமுகவில் இணைந்து குறுகிய காலத்தில் மக்கள் செல்வாக்கை பெற்றவர்.
திமுக மேற்கு மாவட்டச் செயலாளர் எம்எல்ஏ மனோதங்கராஜ் மீண்டும் திமுகசார்பில் பத்மநாபபுரம் தொகுதியில் போட்டியிடுகிறார். குமரி மாவட்டம் கருங்கல் அருகே பாலூரை சேர்ந்த இவருக்கு வயது 53. 1996-ல் மாவட்ட ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT