

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனைத்துக் கட்சி பிரமுகர்கள், உதவி மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி நேற்று நடைபெற்றது. இதில் அரசியல் கட்சியினர் மற்றும் அலுவலர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டன.
இந்தக் கூட்டத்தில் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு வரும்போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து விளக்கப்பட்டது. அதன்படி வேட்பு மனு தாக்கல் செய்ய வருபவர்கள் 2 வாகனங்களில் மட்டுமே வர வேண்டும். வேட்பாளர் ஒருவருடன் 2 நபர்கள் மட்டுமே வர வேண்டும் என்ற அறிவுரைகள் வழங்கப்பட்டன.
வாகனங்கள் குறிப்பிட்ட தூரத்திலேயே நிறுத்தப்பட வேண்டும். வேட்பு மனுவில் என்னென்ன இணைக்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் அவர்களுக்கு வலியுறுத்தப்பட்டன. இதில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் பிரமுகர்கள் பங்கேற்றனர்.
இதனைத் தொடர்ந்து மண்டல மற்றும் உதவி மண்டல அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் நடைபெற்றது. வேட்பு மனு தாக்கல் தொடங்க உள்ள நிலையில் அவர்கள் அதை எவ்வாறு எதிர்கொள்வது, என்ன மாதிரியான நடவடிக்கைகளை எடுப்பது என்ற விளக்கங்கள் அளிக்கப்பட்டன.
இந்தக் கூட்டங்களுக்கு மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பாலமுருகன் உள்பட அரசு அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.