

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக் கான வேட்புமனுத் தாக்கல் நாளை (மார்ச் 12) தொடங்குகிறது. காலை 11 மணி முதல் அந்தந்த தேர்தல்நடத்தும் அலுவலர் அலுவலகங்களில் வேட்புமனுத் தாக்கல் நடைபெறும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் விளாத்திகுளம் தொகுதிக்கு விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகம், தூத்துக்குடி தொகுதிக்கு தூத்துக்குடி சார் ஆட்சியர் அலுவலகம், திருச்செந்தூர் தொகுதிக்கு திருச்செந்தூர் கோட்டாட்சியர் அலுவலகம், வைகுண்டம் தொகுதிக்கு வைகுண்டம் வட்டாட்சியர் அலுவலகம், ஓட்டப்பிடாரம் தொகுதிக்கு ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் அலுவலகம், கோவில்பட்டி தொகுதிக்கு கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்யலாம்.
இந்த அலுவலகங்களில் வேட்புமனுத் தாக்கலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. ஏற்கெனவே ஒவ்வொரு தொகுதிக்கும் 50 வேட்புமனு படிவங்கள் வீதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக ஆட்சியர்கி.செந்தில் ராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வேட்புமனுத் தாக்கல் செய்ய மார்ச் 19-ம் தேதி கடைசி. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வேட்புமனுத் தாக்கல் கிடையாது. மாலை 3 மணிக்குள் அதிகமான வேட்பாளர்கள் வந்திருந்தால், கடைசி நபரில் இருந்து டோக்கன் வழங்கப்பட்டு அனைவரும் வேட்புமனுத் தாக்கல் செய்ய அனுமதிக்கப்படுவர். பொது வேட்பாளர்கள் ரூ.10 ஆயிரம், எஸ்சி, எஸ்டி வேட்பாளர்கள் ரூ.5 ஆயிரம் வைப்பு தொகையாக செலுத்த வேண்டும்.
வேட்பாளர்களுடன் வரும் வாகனங்கள் அனைத்தும் 100 மீட்டர் தொலைவில் தடுத்து நிறுத்தப்படும். 2 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். வேட்புமனுத் தாக்கல் செய்ய வேட்பாளருடன் 2 நபர்கள் மட்டுமே தேர்தல் நடத்தும் அலுவலர் அறைக்குள் அனுமதிக்கப்படுவர். வேட்பாளர்கள் தேர்தல் செலவுகளுக்கு என தனியாக வங்கிக் கணக்கு தொடங்க வேண்டும். அந்த வங்கி கணக்கு நகலை வேட்புமனுவுடன் தாக்கல் செய்ய வேண்டும். வேட்பாளர்கள் ரூ.30 லட்சம் வரை மட்டுமே செலவு செய்ய வேண்டும் என்றார் ஆட்சியர்.