செங்கல்பட்டில் தேர்தல் விதிமுறைகளை செயல்படுத்த - அனைத்து கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் :

செங்கல்பட்டில் தேர்தல் விதிமுறைகளை செயல்படுத்த -  அனைத்து கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் :
Updated on
1 min read

தேர்தல் விதிமுறைகளை செயல்படுத்துவது தொடர்பாக செங்கல்பட்டில் காவல்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆத்ரேஷ் பச்சோ தலைமையில் அனைத்து கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அரசியல் கட்சியினர் ஜாதி, மதம் மற்றும் மொழியினரிடையே வேறுபாட்டை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ளக்கூடாது. தனிநபர் விமர்சனம் செய்யக்கூடாது. ஜாதி, மத அடிப்படையில் வாக்கு சேகரிக்க கூடாது. வழிபாட்டு தலங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்ய கூடாது. இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பிரச்சாரம் செய்யக்கூடாது. நகரில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்களை உடனடியாக அகற்ற வேண்டும். கட்சி அல்லது வேட்பாளர் சார்பில் பொதுக்கூட்டம் நடக்க உள்ள இடம், நேரம் ஆகியவற்றை காவல்துறையிடம் முன்னரே தெரிவிக்க வேண்டும்.

பொதுக்கூட்டம் நடத்த தேர்வு செய்துள்ள இடத்தில் அதற்கான தடை ஏதும் உள்ளதா என்பதை கட்சி அல்லது வேட்பாளர்கள் முன்கூட்டியே உறுதி செய்துகொள்ள வேண்டும்.

பொதுக்கூட்டத்தில் ஒலிபெருக்கி பயன்படுத்த தொடர்புடைய அதிகாரிகளிடம் முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும். பொதுக்கூட்டத்தில் தடையேற்படுத்துவது போல் யாரேனும் செயல்பட்டால் அக்கூட்டத்தை நடத்துபவர் அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்காமல், உடனடியாக காவல்துறையை நாட வேண்டும். வணிகர்கள், திருமண மண்டப உரிமையாளர்கள், நகைக் கடை உரிமையாளர்கள், வங்கி ஊழியர்கள், கேபிள் டி.வி ஆப்ரேட்டர்கள், அச்சக உரிமையாளர்கள் ஆகியோர்களுக்கும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் செங்கல்பட்டு நகர காவல் ஆய்வாளர் விநாயகம், உதவி ஆய்வாளர் சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in