

காரைக்குடி மகரிஷி வித்யா மந்திர் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்த வாக்காளர் விழிப்புணர்வுக் கட்டுரை, ஓவியப் போட்டிகள் நடந்தன. கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என 2 பிரிவுகளாக நடந்த இப்போட்டிகளில் 70-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
கல்லூரி மாணவர்கள் பிரிவு கட்டுரைப் போட்டியில் தேவகோட்டை சேவுகன் அண்ணாமலை கல்லூரி தேவி முதலிடம், காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரி பார்வதி 2-ம் இடம், கோவிலூர் நாச்சியப்ப சுவாமிகள் கலைக் கல்லூரி தாரணி 3-ம் இடம் பெற்றனர்.
பொதுமக்கள் பிரிவு கட்டுரைப் போட்டியில் யாஸ்மின் பரிதா முதலிடம், ஜெயப்பிரகாஷ் 2-ம் இடம், மகாலட்சுமி 3-ம் இடம் பெற்றனர். கல்லூரி மாணவர்கள் பிரிவு ஓவியப் போட்டியில் அழகப்பா அரசு கலைக் கல்லூரி சக்திவிதகன் முதலிடம், காந்திராமன் 2-ம் இடம், உமையாள் ராமநாதன் பெண்கள் கல்லூரி கண்மணி 3-ம் இடம் பெற்றனர், பொதுமக்கள் பிரிவு ஓவியப் போட்டியில் சந்தோஷ்குமார் முதலிடம், செல்வகுமார் 2-ம் இடம், தீபிகா 3-ம் இடம் பெற்றனர்.
பிறகு நடந்த பரிசளிப்பு விழாவில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அந்தோணிராஜ் தலைமை வகித்தார். துணை வட்டாட்சியர்கள் மல்லிகார்ஜூன், முபாரக் உசேன், வருவாய் ஆய்வாளர்கள் மெஹர் அலி, பிரபாகரன் முன்னிலை வகித்தனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. சாலை பாதுகாப்புப் படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ்மணிமாறன் நன்றி கூறினார்.