

கிருஷ்ணகிரியில் சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை 6 சட்டப்பேரவை தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் ஒப்படைக்கும் பணி நேற்று தொடங்கியது.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு பெட்டக அறை, கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் ஆகிய இடங் களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன.
இவற்றை 6 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் வழங்கும் பணி நேற்று தொடங்கியது. இதனை மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ஜெயசந்திர பானு ரெட்டி ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:
ஊத்தங்கரை (தனி), பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி, ஓசூர், தளி ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவுக்காக பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பகிர்ந்தளிப்பதற்காக அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்பாக இந்திய தேர்தல் ஆணைய இணையதளத்தின் மூலம் சுழற்சி முறையினை பயன்படுத்தி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
மொத்தம் உள்ள 2298 வாக்குப்பதிவு மையங்களுக்கு 2715 பேலட் யூனிட், 2715 கண்ட்ரோல் யூனிட், 2944 விவி பேட் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அவ்வாறு ஒதுக்கீடு செய்யப்பட்ட இயந்திரங்கள், அந்தந்த சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு, அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் வழங்கப்படுகிறது. இவ்வாறு ஆட்சியர் கூறினார்.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் சதீஷ், சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி, வருவாய் கோட்டாட்சியர் கற்பகவள்ளி, அதிமுக காத்தவராயன், திமுக விஸ்வபாரதி, ரவிச்சந்திரன், காங்கிரஸ் பன்னீர்செல்வம், தேசியவாத காங்கிரஸ் சந்திரமோகன் மற்றும் முகவர்கள் உடனிருந்தனர்.