

கிருஷ்ணகிரி பழையபேட்டையில், வீரத்தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர்கள் கட்சியின், வேட்பாளர்கள் அறிமுகக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கட்சியின் நிறுவனரும், தலைமை ஒருங்கிணைப்பாளருமான செல்வம் தலைமை வகித்தார். கூட்டத்தில், தளி சட்டப்பேரவைத்தொகுதிக்கு ஜானகி, கிருஷ்ணகிரி தொகுதிக்கு விஜயகுமார், வேப்பனப்பள்ளி தொகுதிக்கு சுப்பிரமணியன், ஓசூர் தொகுதிக்கு எழிலன், பர்கூர் தொகுதிக்கு ஆண்டி ஆகியோர் வேட்பாளராக நிறுத்தப்படுவதாக கூட்டத்தில் அறிவிக்கப்பட்டு, அறிமுகப்படுத்தப்பட்டனர்.
நீண்ட நாட்களாக இட ஒதுக்கீடு கோரி வந்த நிலையில், வன்னியர் உள்ளிட்டசிலருக்குமட்டும் உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதைக் கண்டித்து வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக முழுவதும் போட்டியிட உள்ளோம் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
தேர்தல் வாக்குறுதிகளாக அனைத்து குடும்பத்தினருக்கும் தரமான ஆண்ட்ராய்டு செல்போன், ஒவ்வொரு ஒன்றியத்துக்கும் உழவு ஓட்டும் 2 டிராக்டர்கள், ஒரு நெல் அறுவடை இயந்திரம் வழங்கப்படும், விவசாயிகள் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம். பேருந்துகளில் மகளிருக்கு 50 சதவீதம் கட்டணச் சலுகை, பெண்களின் வறுமையைப் போக்க மாதம் ரூ.3 ஆயிரம், வங்கியில் கடன் பெற்றவர்கள் குறிப்பிட்ட தேதியில் கட்டவில்லையென்றால் வங்கிகள் விதிக்கும் அபராதக் கட்டணம், செக் பவுன்ஸ் கட்டணம், கூட்டுவட்டி எதுவும் கட்டத் தேவையில்லை என்பது உள்ளிட்ட 25 திட்டங்கள் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.