

கிருஷ்ணகிரியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களிப்பது தொடர்பான மாதிரி வாக்குப்பதிவு முகாம் நடந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை (தனி), பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி, ஓசூர், தளி ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில், கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்தில் மின்னணு இயந்திரத்தில் எவ்வாறு வாக்குப்பதிவு செய்வது தொடர்பான மாதிரி வாக்குப்பதிவு முகாம் நடந்தது. இதனை மாவட்ட தேர்தல் அலுவலர், ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தொடங்கி வைத்தார்.
ஆட்சியர் கூறும்போது, மாதிரி வாக்குப்பதிவு முகாமில், வாக்காளர்களிடம் மின்னணு வாக்குப்பதிவு ,இயந்திரத்தில் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என்பது குறித்தும், வாக்காளர்கள்யாருக்கு வாக்களித்தார்கள் என்பதை அவர்களுக்கு மட்டும் தெரிவிக்கும் வகையில் அமைக் கப்படும் வாக்காளர் வாக்குப்பதிவு தணிக்கைஇயந்திரம் (விவிபேட்) செயல்படும் விதம் குறித்தும் விரிவாக செயல்விளக்கம் அளிக்கப்படுகிறது என்றார்.
மேலும், மாதிரி வாக்குப்பதிவு முகாமில், பேருந்தில் நிலையத்தில் இருந்த பயணிகள் பலர் வாக்குப்பதிவு இயந்திரத்தில் மாதிரி வாக்குகளை செலுத்தினர்.
இந்நிகழ்வில், வருவாய் கோட்டாட்சியர் கற்பகவல்லி, கிருஷ்ணகிரி சட்டப்பேரவை தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் செந்தில்குமார், மகாராஜகடை காவல் ஆய்வாளர் கணேஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.