

தேர்தல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூத்துக்குடி மாவட்டத்தில் 441 பேர் தங்களதுதுப்பாக்கிகளை காவல் நிலையங்களில் ஒப்படைத்துள்ளதாக எஸ்பி ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:
தமிழக சட்டப்பேரவை தேர்தல்பாதுகாப்பை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 1முதல் கடந்த 2 மாதங்களில் 37 பேர் குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்ற விசாரணை நடைமுறைச் சட்டப்படி 1,280 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜாமீனில் விடக்கூடாத பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 116 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் 536 பேர் உரிமம் பெற்று துப்பாக்கி வைத்துள்ளனர், அவர்களில் 441 பேர் தங்களது துப்பாக்கிகளை காவல் நிலையங்களில் ஒப்படைத்துள்ளனர், இதில் 65 பேர் அரசாங்கத்தால் விதி விலக்கு பெற்றவர்கள். மீதம் உள்ள 30 துப்பாக்கிகளையும் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க ஏதுவாக எல்லை பாதுகாப்பு படையினர், தமிழ்நாடு சிறப்புக் காவல் படையினர், ஆயுதப்படையினர், உள்ளூர் காவல்துறையினர் 200 பேர் இடம் பெற்ற கொடி அணிவகுப்பு பதற்றமான பகுதிகளான தூத்துக்குடி நகரம், ஆத்தூர், ஆறுமுகநேரி, வைகுண்டம், திருச்செந்தூர், உடன்குடி, கோவில்பட்டிஆகிய இடங்களில் நடத்தப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகளை மீறுவது, வாக்களிக்க கையூட்டாக பணமாகவோ, பொருளாகவோ பெற்றாலோ, கொடுத்தாலோ சட்டப்படி குற்றமாகும். சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.