

மதுபானங்கள் கடத்தப்படுவதை தடுக்கும் வகையில், ஆந்திர, கர்நாடக மாநில எல்லையோர சோதனைச்சாவடிகளில் வாகனச் சோதனை தீவிரப்படுத்தப் பட்டுள்ளது. ஆந்திர எல்லையில் உள்ள சோதனைச்சாவடிகளில் வாகனச்சோதனைதய கிருஷ்ணகிரி மாவட்ட தேர்தல் அலுவலர், ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி ஆய்வு செய்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர், வேப்பனப்பள்ளி சட்டப்பேரவைத் தொகுதிகள் ஆந்திர மாநிலத்தின் எல்லையில் உள்ளன. ஓசூர் தொகுதி கர்நாடக மாநில எல்லையில் உள்ளது. இந்நிலையில், பர்கூர் தொகுதிக்கு உட்பட்ட ஆந்திர எல்லையில் உள்ள குருவிநாயனப்பள்ளி, வேப்பனப்பள்ளி தொகுதிக்கு உட்பட்ட ஆந்திர எல்லையில் உள்ள அரியனப்பள்ளி சோதனைச்சாவடிகளில் நேற்று மாவட்ட தேர்தல் அலுவலர், ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி ஆய்வு செய்தார். மதுக் கடத்தல் தடுப்பு மற்றும் வாகனத் தணிக்கை பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர் ஜெயசந்திரபானு ரெட்டி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஆந்திர, கர்நாடக மாநில எல்லையோரங்களில் 11 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை கடக்கும் வாகனங்கள் தீவிரமாக சோதனை செய்யப்பட்டு வருகின்றன. வேப்பனப்பள்ளி சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட ஆந்திர மாநில எல்லையையொட்டி அந்திகுண்டாவெளி, கர்நாடக எல்லையையொட்டி நேரலகிரி, ஓசூர் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட மத்திகிரி, கொத்தகொண்டப்பள்ளி, டி.வி.எஸ்., பூனப்பள்ளி, கர்னூர், பாகலூர் கக்கனூர், பர்கூர் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட ஆந்திர மாநில எல்லையில் உள்ள வரமலகுண்டா, குருவிநாயனப்பள்ளி, தளி சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட கர்நாடக மாநில எல்லையான கும்ளாபுரம், கெம்பட்டி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடிகளில் வாகனங்கள் முழுமையாக கண்காணிக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குறிப்பாக, மதுக்கடத்தல் உள்ளிட்டவை தீவிர மாக கண்காணிக்கப்படுகின்றன.வாகனங்கள் தணிக்கையைத்தொடர்ந்து தீவிரமாக மேற்கொள்ளவேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு ஆட்சியர் தெரிவித்தார்.
இந்நிகழ்வின் போது கிருஷ்ணகிரி சட்டப்பேரவைத் தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.