

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சட்டப்பேரவை தேர்தலில் பணப்பட்டுவாடா மற்றும் முறைகேடுகள் தொடர்பாக கட்டுப்பாட்டு அறை எண் மற்றும் செயலி வழியாக புகார் அளிக்கலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் தொடர்பான புகார்கள் அளிக்க, 24 மணி நேரமும் செயல்படும் வகையில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டு அறையை மாவட்ட தேர்தல் அலுவலர் ஜெயசந்திர பானுரெட்டி ஆய்வு செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
சட்டப்பேரவை தேர்தலுக்காக, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை திறக்கப் பட்டுள்ளது.
கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் சுழற்சி முறையில் செயல்படும். துணை வட்டாட்சியர் நிலையில் 3 நபர்கள், உதவியாளர் நிலையில் 6 பேர், மாவட்ட ஆட்சியரின் உதவியாளர்(வளர்ச்சி) தலைமையில் கட்டுப்பாட்டு அறை செயல்படுகிறது. தேர்தல் விதிமுறைகள், பணம் பட்டுவாடா தொடர்பான புகார்களை கட்டுப்பாட்டு அறையில் செயல்படும் அலுவலக தொலைபேசி எண்கள் 1800 425 7076 மற்றும் 1950 ஆகியவற்றில் தெரிவிக்கலாம்.
இதே போல் தேர்தல் கட்டுப்பாட்டு அறை எண் 04343 - 233025, வாட்ஸ் அப் எண் 63697 00230 உள்ளிட்ட எண்களிலும் புகார்களை தெரிவிக்கலாம். மேலும், cVIGIL செயலியை பதிவிறக்கம் செய்து, இதன் மூலம் புகார்களை அளிக்கலாம். பெறப்படும் புகார்கள் தொடர்பாக, சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட கண்காணிப்பு குழுக் களுக்கு தெரிவிக்கப்படும்.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறப்பட்டிருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். எனவே பொதுமக்கள், வாக்காளர்கள் தேர்தல் விதிமீறல்கள் குறித்து இலவச தொலைபேசி எண்ணை பயன்படுத்தி புகார் களை தெரிவிக்கலாம். இவ்வாறு தெரிவித்தார்.