

கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில், கிருஷ்ணகிரி பகுதியில் மலைகள், காடுகளில் தீ விபத்து ஏற்படாமல் தடுக்க வனத்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி நகரைச் சுற்றிலும் அவதானப்பட்டி மலை, காட்டிநாயனப்பள்ளி மலை, கிருஷ்ணகிரி மலை, கூசுமலை, ஆஞ்சேரி மலை ஆகியவை உள்ளன. இந்த மலைகளில் அரிய வகை மரங்களும், விலங்கினங்களும் உள்ளன. இலையுதிர் காலத்தில் மரங்களில் இருந்து உதிரும் இலைகள், வெயிலில் எளிதில் தீப்பிடித்து கொள்ளும் வகையில் இருக்கும். இதனால், மலைகளில் தீ விபத்து ஏற்படாமல் தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக பொதுமக்கள் கூறும்போது, ‘‘கடந்த சில நாட்களாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. மலைகளில் ஆடு, மாடுகள் மேய்ச்சலுக்கு செல்பவர்கள் மற்றும் மர்ம நபர்களால் மலைகளில் காய்ந்திருக்கும் இலைகள், புற்களுக்கு தீ வைக்கும் சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம். எனவே, நிகழாண்டில் மலைகளில் தீ விபத்தை தடுக்க வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும்,’’ என்றனர்.