

திருவள்ளூர் மாவட்டத்தில் பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் விரைவில் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படவுள்ளது.
தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, திருவள்ளூர், லட்சுமிபுரத்தில் உள்ள தமிழக அரசின் சேமிப்புக் கிடங்கில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரம், வாக்குப் பதிவை உறுதி செய்யும் இயந்திரம் குறித்த பயிற்சி மற்றும் விழிப்புணர்வு நிகழ்வு நேற்று நடந்தது.
இந்நிகழ்வில் பங்கேற்ற மாவட்ட தேர்தல் அலுவலர் பொன்னையா செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
திருவள்ளூர் மாவட்டத்தில் பொதுமக்கள் அனைவருக்கும் வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் வாக்குப் பதிவை உறுதி செய்யும் இயந்திரத்தின் செயல்பாடுகள் குறித்து பயிற்சி மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.
இதற்காக, 10 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு தேவையான வாக்குப் பதிவு இயந்திரம் மற்றும் வாக்குப் பதிவை உறுதி செய்யும் இயந்திரங்களில் 5 சதவீத இயந்திரங்கள் மூலம் பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படவுள்ளது.
இவை அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் 10 சட்டப்பேரவை தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு வழங்கப்பட்டு விரைவில் பயிற்சிக்காக பயன்படுத்தப்படவுள்ளன.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பின்னர், ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் தொடர்பான புகார்களை பெறுவதற்கான 24 மணிநேர கட்டுப்பாட்டு அறை மற்றும் ஊடகச் சான்று, ஊடக கண்காணிப்பு அறையை மாவட்ட தேர்தல் அலுவலர் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
பிறகு, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை மாவட்ட தேர்தல் அலுவலர் பொன்னையா தொடங்கி வைத்தார். இந்நிகழ்வுகளில், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லோகநாயகி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) முரளி, திருவள்ளூர், பொன்னேரி, ஆவடி, திருத்தணி வட்டாட்சியர்களான செந்தில், மணிகண்டன், செல்வம், ஜெயராணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.