

தேர்தல் தொடர்பாக அச்சிடப்படும் துண்டுப் பிரசுரங்கள், சுவரொட்டி கள், விளம்பரத் தட்டிகள் ஆகியவற்றில், அச்சகத்தின் விவரம் குறிப்பிட வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், அச்சக உரிமையாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மாவட்ட தேர்தல் அலுவலர் ஆட்சியர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை வகித்தார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:
சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடைபெறுவதையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அச்சுக் கூடங்களின் உரிமையாளர்கள், அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் மற்றும் எந்தவொரு நிகழ்வுகளுக்கும் அச்சிடப்படும் சுவரொட்டிகள், துண்டுப் பிரசுரம், விளம்பரத் தட்டிகள் போன்றவற்றில் அச்சுக் கூடத்தின் பெயர், தொலைபேசி எண் மற்றும் எண்ணிக்கையை கண்டிப்பாக குறிப்பிட வேண்டும்.
வேட்பாளர் தேர்தல் செலவுக் கணக்கில் சேர்க்கப்பட வேண்டியுள்ளதால் விளம்பரத் தட்டிகள், சுவரொட்டிகள் மற்றும் துண்டுப் பிரசுரங்கள் அச்சிட்டதற்கான பட்டியலை தேர்தல் பிரிவிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
எனவே, தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளை கடைபிடித்து சட்டப்பேரவை தேர்தலை அமைதியான முறையில் நடத்த அச்சக உரிமையாளர்கள் மற்றும் பதிப்பகத்தார் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு ஆட்சியர் பேசினார்.
இக்கூட்டத்தில் தேர்தல் பிரிவு வட்டாட்சியர் ஜெயசங்கர், அச்சக உரிமையாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.