வாக்காளர் விழிப்புணர்வுக்காக மாற்றுத்திறனாளிகள் ஸ்கூட்டர் பேரணி :
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், வாக்களிப்பதன் அவசியம் குறித்து வாக்காளர் களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாற்றுத் திறனாளிகள் நேற்று ஸ்கூட்டர் பேரணி நடத்தினர்.
பேரணியை, ஆட்சியர் த.ரத்னா கொடியசைத்து தொடங்கி வைத் தார். பேரணி, முக்கிய சாலை வழி யாக சென்று பேருந்து நிலையத்தை அடைந்தது. பேரணியில் கலந்து கொண்ட 100-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் இளம் வாக்காளர்கள் வாக்களிப்பதன் அவசியம் குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்திச்சென்றனர்.
முன்னதாக, ஆட்சியர் வளாகத்தில், வாக்களிப்பதன் அவசியம் குறித்த கையெழுத்து இயக்கத்தை ஆட்சியர் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, பேருந்து நிலையத்தில், வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு கலைக்குழு பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட வருவாய் அலுவலர் ரா.ஜெய்னுலாப்தீன், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் பொம்மி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
