அய்யா வைகுண்டர் அவதார தினவிழா கொண்டாட்டம் : சாமிதோப்புக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஊர்வலம்

திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதார பதியையொட்டி உள்ள கடற்கரையில் குவிந்த பக்தர்கள்.
திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதார பதியையொட்டி உள்ள கடற்கரையில் குவிந்த பக்தர்கள்.
Updated on
1 min read

அய்யா வைகுண்டரின் அவதாரதினவிழா குமரியில் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமிதோப்புக்கு ஊர்வலமாக சென்றனர்.

அய்யா வைகுண்டர்சாமியின் அவதார தினவிழாவை முன்னிட்டு கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு நேற்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் இரவில் இருந்தே இம்மாவட்டங்கள் மற்றும் கேரளாவில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமிதோப்பில் திரண்டனர். குறிப்பாக, வைகுண்டர் விஞ்சை பெற்றதிருச்செந்தூரில் இருந்து ஏராளமான பக்தர்கள் வாகனங்களில் புறப்பட்டு, நாகர்கோவில் நாகராஜா திடலை அடைந்தனர். இதுபோல், திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டு வந்த ஊர்வலம் நாகராஜா திடலை அடைந்தது. அங்கு அய்யாவழி பக்தர்களின் சமய மாநாடு நடைபெற்றது.

நேற்று அதிகாலை நாகராஜா கோயில் திடலில் இருந்து சாமிதோப்புக்கு அய்யாவழி பக்தர்களின் அய்யா அவதார தின ஊர்வலம் நடைபெற்றது. வைகுண்டர்பதி குரு பாலபிரஜாபதி அடிகளார் தலைமை வகித்தார். அய்யாவின் அகிலத்திரட்டு ஏந்திய அலங்கரிக்கப்பட்ட வாகனம் முன்செல்ல, தொடர்ந்து பக்தர்கள் பேரணியாக சென்றனர்.

சுசீந்திரம், வடக்கு தாமரைகுளம் வழியாக சாமிதோப்பு தலைமை பதியை ஊர்வலம் அடைந்தது. இதுபோல், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக சாமிதோப்புக்கு வந்தனர். முத்திரிக்கிணறு பகுதியில் எங்குபார்த்தாலும் பக்தர்களாக காட்சியளித்தனர். அரசு சிறப்பு பேருந்துகள் சாமிதோப்புக்கு இயக்கப்பட் டன.

தூத்துக்குடி

தொடர்ந்து காலை 6.30 மணிக்கு சூரிய உதயத்தில் கடலில் பதமிட்டு சூரிய பிரகாச சுத்த அய்யா வைகுண்டரை அவதார பதிக்கு அழைத்து வருதல், தொடர்ந்து அவதார தினவிழா பணிவிடை, அன்னதர்மம், இனிமம் வழங்குதல் ஆகியவை நடைபெற்றன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு, கடலில் புனித நீராடி சூரிய நமஸ்காரம் செய்தனர்.

முன்னதாக திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதார பதியில் புதிதாக அமைக்கப்பட்ட கல்நிலை வாயிலை அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ நேற்றுமுன்தினம் இரவு திறந்து வைத்தார். விழாவுக்கான ஏற்பாடுகளை வள்ளியூர் அய்யாவழி அகில திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் எஸ்.தர்மர், செயலாளர் பொன்னுதுரை, பொருளாளர் ஏ.ராமையா மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

இதேபோல மாவட்டம் முழுவதும் உள்ள அய்யா வைகுண்டர் கோயில்களிலும் நேற்று அவதார தின விழா சிறப்பாக நடைபெற்றது.

பாளையங்கோட்டை

அதிகாலை 5 மணிக்கு பால் பணிவிடை, காலை 7 மணிக்கு அய்யா தொட்டில் வாகன பவனி நடைபெற்றது.

காலை 9 மணிக்கு அன்ன தர்மமும், பகல் 12 மணிக்கு உச்சிப்படிப்பு, பணிவிடை நடைபெற்றது. மதியம் சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. இதில் அய்யாவழி பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு உகப்பெருக்கு, பணிவிடை, இரவு 7 மணிக்கு அய்யா காளை வாகனத்தில் பவனி நடைபெற்றது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in