திருவள்ளுவர் பல்கலை பட்டமளிப்பு விழாவில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்பு : பாதுகாப்பு ஏற்பாடுகளை ஐஜி சங்கர் ஆய்வு

திருவள்ளுவர் பல்கலை பட்டமளிப்பு விழாவில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்பு :  பாதுகாப்பு ஏற்பாடுகளை ஐஜி சங்கர் ஆய்வு
Updated on
1 min read

திருவள்ளுவர் பல்கலைக் கழகத்தில் வரும் 10-ம் தேதி நடைபெற உள்ள 16-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்று பட்டங்களை வழங்கவுள்ளார்.

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேர்க்காட்டில் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் உள்ளது. பல்கலைக்கழகத்தின் 16-வது பட்டமளிப்பு விழா வரும் 10-ம் தேதி காலை 10.30 மணியளவில் நடைபெறவுள்ளது. பல்கலைக்கழக விழா அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தலைமை தாங்குகிறார். இதில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், சிறப்பு விருந்தினராக பங்கேற்று பட்டங்களை வழங்கி விழா பேருரையாற்ற உள்ளார்.

பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க உள்ள குடியரசுத் தலைவர் சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பல்கலைக்கழகம் அருகே உள்ள ஹெலிபேடில் தரையிறங்க உள்ளார். அங்கிருந்து பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்கும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பின்னர் வேலூர் அடுத்த அரியூர் நாராயணி பீடத்தில் நடைபெற உள்ள சிறப்பு யாகத்தில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்யவுள்ளார்.

வேலூர் மாவட்டத்துக்கு குடியரசுத் தலைவர் வருகையை யொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக வடக்கு மண்டல ஐஜி சங்கர் ஆய்வு செய்துள்ளார். பாதுகாப்புப் பணியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் ஈடுபடவுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in