Published : 01 Mar 2021 03:17 AM
Last Updated : 01 Mar 2021 03:17 AM

தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சென்னையில் அமித் ஷாவுடன் இபிஎஸ், ஓபிஎஸ் சந்திப்பு பாஜகவுக்கு 21 தொகுதிகள் ஒதுக்கீடா?

மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக முன்னாள் தேசிய தலைவருமான அமித் ஷாவை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நேற்றிரவு சந்தித்து பேசினர். அப்போது நடந்த தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் 21 அல்லது 22 தொகுதிகள் பாஜகவுக்கு ஒதுக்கப்படும் என அதிமுக தரப்பில் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் தற்போதுள்ள 15-வது சட்டப்பேரவைக்கான பதவிக்காலம் வரும் மே 23-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதை முன்னிட்டு, சட்டப்பேரவை பொதுத்தேர்தல் அறிவிப்பு நேற்று முன்தினம் வெளியானது. அதில், வரும் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 12-ம் தேதி வேட்புமனுத் தாக்கல் தொடங்கி 19-ம் தேதியுடன் நிறை வடைகிறது.

தொடர் பேச்சுவார்த்தை

தமிழகத்தில் அதிமுக, திமுக கூட்டணியில் 2 நாட்களுக்கு முன்பு வரை கூட்டணி குறித்தோ, தொகுதி பங்கீடு குறித்தோ எவ்வித பேச்சுவார்த்தையும் நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், முதல் கட்சியாக அதிமுக தனது கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தொடங்கியது. இதில் உடன்பாடு எட்டப்பட்டு பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தானது.

இதுதவிர பாஜகவுடனான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை கடந்த 2 நாட்களாக தீவிரமாக நடைபெற்றது. மேலும் அதிமுக மற்றும் பாஜக தரப்பில் அக்கட்சியின் தலைவர்கள் தமிழகமெங்கும் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். இதன்தொடர்ச்சியாக பாஜகவின் மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள தமிழகம் வந்தார். விழுப்புரத்தில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தை நிறைவு செய்த பின் அவர் சென்னை வந்தார்.

அவரை தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சந்தித்துப் பேசினர். அப்போது பாஜக தேர்தல் பொறுப்பாளரும் மத்திய உள்துறை இணை அமைச்சருமான கிஷன் ரெட்டி, தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தொகுதிகள் எத்தனை?

அப்போது நடந்த தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையில் 21 அல்லது 22 தொகுதிகளை பாஜகவுக்கு ஒதுக்க அதிமுக முடிவு செய்துள்ளதாகவும் எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து பிறகு பேசி முடிவு செய்து கொள்ளலாம் என்றும் தீர்மானிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இருப்பினும் இரவு 11.30 மணி வரை பேச்சுவார்த்தை நீடித்தது. இதனால் டெல்லி புறப்பட வேண்டிய மத்திய அமைச்சர் அமித் ஷாவின் பயணம் தாமதமானது. இருப்பினும் பாஜகவுக்கான தொகுதிகளின் எண்ணிக்கை விவரம் வெளியாகவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x