சரியான விவரங்கள் அச்சடிக்கப்படாத குடிநீர் பாட்டில்களை விற்றால் நடவடிக்கை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

சரியான விவரங்கள் அச்சடிக்கப்படாத குடிநீர் பாட்டில்களை விற்றால் நடவடிக்கை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
Updated on
1 min read

திருவாரூர் மாவட்டத்தில், சரியான விவரங்கள் அச்சடிக்கப்படாத பாட்டில்களில் குடிநீர் அடைத்து விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் வே.சாந்தா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

திருவாரூர் மாவட்டத்தில் இயங்கிவரும் அடைக்கப்பட்ட குடிநீர் தயாரிப்பு நிறுவனங்கள், உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறையின் சட்டம் மற்றும் விதிகளுக்கு உட்பட்டு, தங்களின் தயாரிப்பில் பேட்ச் எண், தயாரிப்பு தேதி, காலாவதி தேதி ஆகிய அனைத்தையும் தவறாமல் அச்சடித்திருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் விதிகள் மீறப்பட்டால், உணவு பாதுகாப்புத் துறை சார்பில் சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும்.

மொத்த விற்பனையாளர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள், குடிநீர் தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து விற்பனைக்கு வாங்கும் பாட்டில்களில் சரியான விவரங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளனவா என சரிபார்த்து வாங்கி, விற்பனை செய்ய வேண்டும். சரியான விவரங்கள் இல்லாமல் விற்பனை செய்யும் மொத்த விற்பனையாளர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்களின் மீதும் சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், பாட்டில் குடிநீரை வாங்கி பயன்படுத்தும் பொதுமக்களும், அனைத்து விவரங்களும் அச்சிடப்பட்டுள்ள குடிநீரையே வாங்க வேண்டும். பாட்டில் குடிநீர், உணவுப் பொருட்களில் ஏதேனும் தவறுகள் இருப்பின், தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறையின் 9444043322 என்ற வாட்ஸ் அப் எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in