Published : 27 Feb 2021 03:17 AM
Last Updated : 27 Feb 2021 03:17 AM

2-வது நாளாக தொடரும் வேலைநிறுத்தம்; போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர்

புதிய ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை நேற்று முன்தினம் தொடங்கினர். இதையடுத்து, நேற்று 2-வது நாளாக போராட்டம் தொடர்ந்தது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் முதல் நாளைப் போலவே, நேற்றும் 50 சதவீத பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன. இதனால், தனியார் பேருந்துகளில் பொதுமக்களின் கூட்டம் அதிகளவில் இருந்தது. இதற்கிடையே, கோரிக்கைகளை வலியுறுத்தி கும்பகோணம் தலைமை அலுவலகம் மற்றும் மாவட்டத்தில் உள்ள 10 பணிமனைகளிலும் அரசு போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து 2-வது நாளாக 135 பேருந்துகள் இயக்கப்படவில்லை. மன்னார்குடி, திருவாரூர், திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட பணிமனைகளில் நேற்று தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகையில் 2-வது நாளாக தொடர்ந்து நடைபெற்ற போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, அரசு விரைவு போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு நாகை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கவுதமன் தலைமையில், நகரச் செயலாளர் போலீஸ் பன்னீர் உள்ளிட்ட திமுகவினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர் பணிமனையிலிருந்து இயக்கப்படும் 92 பேருந்துகளில் 33 பேருந்துகள் மட்டுமே நேற்று இயங்கின. பெரம்பலூர் துறைமங்கலத்திலுள்ள பணிமனை முன்பு தொமுச கிளைத் தலைவர் குமார் தலைமையில் போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை மண்டலத்துக்கு உட்பட்ட போக்குவரத்து அலுவலகங்களில் இருந்து 417 புறநகர் மற்றும் நகர் பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், நேற்று 10 சதவீத அரசுப் பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன. குறைந்த அளவிலான பேருந்துகள் இயக்கப்பட்டதால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

கரூர் மாவட்டத்தில் 2-வது நாளாக நேற்று 100 சதவீத அரசுப் பேருந்துகளும், தனியார் பேருந்துகளும் இயக்கப்பட்டன. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழக கரூர் மண்டல அலுவலகம் முன் தொமுச கிளைத் தலைவர் இளங்கோவன் தலைமையில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தையொட்டி, கரூர் மண்டல அலுவலகத்தில் தற்காலிக ஓட்டுநர், நடத்துநர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யும் பணி நேற்று நடைபெற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x