செம்மறி ஆடுகள் இறந்த விவகாரத்தில் விசாரிக்க காங்கிரஸ் வலியுறுத்தல்
திருப்பூர்: திருப்பூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ப.கோபி நேற்று வெளியிட்ட அறிக்கையில், "திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே ராமலிங்காபுரம் எஸ்.பி.கே. தோட்டத்தை சேர்ந்தவர் விவசாயி தங்கவேல். இவருக்கு சொந்தமான 33 செம்மறி ஆடுகளை, தெரு நாய்கள் கடித்து குதறியதில் இறந்துவிட்டதாக கடந்த 24-ம் தேதி செய்தி வெளியாகியது. ஒரே நேரத்தில் 33 செம்மறி ஆடுகளை தெரு நாய்கள் கடித்து குதறின என்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அருகே வசிப்போர் முன்விரோதம் காரணமாக ஏதேனும் சதி செய்திருக்கக்கூடும் என்ற சந்தேகமும் எழுகிறது. எனவே, வெள்ளகோவில் போலீஸார் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு, உண்மையை வெளிக்கொணர வேண்டும். மேலும், செம்மறி ஆடுகள் இறப்பினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள விவசாயி தங்கவேலுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தெருக்களில் சுற்றித்திரியும் தெரு நாய்களை பிடித்து காப்பகத்தில் கொண்டு சேர்க்க, உள்ளாட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
