

நாகர்கோவில்: வடிவீஸ்வரம் அழகம்மன் கோயில் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து தேரை இழுநத்தனர். நாகர்கோவில் வடிவீஸ்வரத்தில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற இக்கோயிலில் 10 நாள் திருவிழா கடந்த 17-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் ரிஷப வாகனம், புஷ்ப வாகனம், சிம்ம வாகனம், கைலாச பர்வத வாகனத்தில் சுவாமி மற்றும் அம்மன் வீதியுலா வந்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. வெள்ளிக் குதிரை வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி தடம் பார்க்க எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் விநாயகர், சுவாமி, அம்மன் தேரோட்டம் நடைபெற்றது.
விநாயகர் தேரை சிறுவர், சிறுமிகளும், அம்மன் தேரை பெண் பக்தர்களும் வடம் பிடித்து இழுத்தனர். நான்கு ரத வீதிகளிலும் தேர் பவனி வந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.இரவில் சுவாமியும், அம்மனும் ரிஷப வாகனத்தில் புறப்பாடாகி சப்தாவர்ணம் நடைபெற்றது. விழா நிறைவு நாளான இன்று இரவு சுவாமிக்கும், அம்மனுக்கும் ஆராட்டு நடைபெறுகிறது.