Published : 25 Feb 2021 03:17 AM
Last Updated : 25 Feb 2021 03:17 AM

வாணியம்பாடியில் எருது விடும் விழா: மாடு முட்டியதில் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம்

வாணியம்பாடி அருகே நடைபெற்ற எருது விடும் திருவிழாவில் மாடு முட்டியதில் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கிரிசமுத்திரம் கிராமத்தில் மாசி மாத திருவிழாவை முன்னிட்டு எருது விடும் விழா நேற்று நடைபெற்றது. இதில், திருப்பத்தூர், வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஆந்திர மாநிலம் குப்பம், சித்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 400-க்கும் மேற்பட்ட எருதுகள் கலந்துகொண்டன.

வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் எருது விடும் விழாவை காண கிரிசமுத்திரம் கிராமத்தில் நேற்று குவிந்தனர். விழா தொடங்குவதற்கு முன்பாக, வாணியம்பாடி வருவாய்த் துறையினர் விழா நடைபெறும் இடத்தில் ஆய்வு நடத்தினர். பின்னர், கால்நடை பராமரிப்புத்துறையினர் போட்டியில் கலந்து கொள்ள வந்த எருதுகளை பரிசோதனை செய்தனர்.

காலை 10 மணிக்கு தொடங்கிய எருது விடும் விழா நண்பகல் 1.30 மணிக்கு முடிவடைந்தது. போட்டி தொடங்கியவுடன் எருதுகள் இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்து ஓடின. இதில், வாணியம்பாடி அடுத்த மதனாஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த எருதுவின் உரிமையாளருக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சமும், ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியைச் சேர்ந்த எருதுவின் உரிமையாளருக்கு 2-ம் பரிசாக ரூ.70 ஆயிரமும், வாணியம்பாடி அடுத்த நிம்மியம்பட்டு பகுதியைச் சேர்ந்த எருதுவின் உரிமையாளருக்கு 3-ம் பரிசாக ரூ.50 ஆயிரம் என மொத்தம் 40-க்கும் மேற்பட்ட பரிசுகள் வழங்கப்பட்டன.

வாணியம்பாடி துணை காவல் கண்காணிப்பாளர் பழனிசெல்வம் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டனர். வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி போட்டியில் விதிமுறைகள் மீறப்படுகிறதா? என்பதை நேரில் ஆய்வு செய்தார். இதில், மாடுகள் முட்டியதில் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x