Published : 24 Feb 2021 03:17 AM
Last Updated : 24 Feb 2021 03:17 AM

செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.848 கோடியில் 7 புதிய திட்டங்களை முதல்வர் தொடங்கி வைத்தார்

செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்லாவரம், பம்மல் ஆகிய நகராட்சிகளில் குடிநீர் திட்டம் உள்ளிட்ட ரூ.610 கோடி மதிப்பீட்டில் 2 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் பழனிசாமி நேற்று காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். மேலும், ரூ.237 கோடி மதிப்பீட்டில் பல்வேறுதிட்டங்களை முதல்வர் நேற்று தொடங்கி வைத்தார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு துறைகளைச் சார்ந்த 7 புதிய திட்டங்களை முதல்வர் பழனிசாமி நேற்று காணொலி காட்சி மூலம்,தொடங்கி வைத்தார்.

சமூகநலத் துறை சார்பில் செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரியில் பணிபுரியும் மகளிருக்காக நவீன வசதிகளுடன் கூடிய விடுதி ரூ.7 கோடியே 40 லட்சம் மதிப்பீட்டில் 158 பேர் தங்கும் வகையில் கட்ட முதல்வர் அடிக்கல் நாட்டினார்.

அதேபோல் நெடுஞ்சாலைத் துறை சார்பில் ரூ. 603 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் செங்கை மாவட்டம் செய்யூர் முதல் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி மற்றும் பாலூரை இணைக்கும் வகையில் இரு வழிசாலையை நான்கு வழிச்சாலையாக மாற்ற அடிக்கல் நாட்டப்பட்டது.

சென்னை மேடவாக்கம் சந்திப்பில் சுமார் ரூ.300 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தின் ஒரு பகுதியில் ரூ 51 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட பள்ளிக்கரணையில் இருந்து தாம்பரம் வரை செல்லும் வழி மற்றும் தரப்பாக்கம், அனகாபுத்தூர் ஆகியவற்றை இணைக்கும் அடையாறு மேம்பாலத்தின் மேல் ரூ.12 கோடியே 21 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட மேம்பாலத்தையும் முதல்வர் நேற்று திறந்து வைத்தார்.

இதேபோல் சென்னை குடிநீர் வாரியம் சார்பில் பல்லாவரம், பம்மல் நகராட்சிகளில் ரூ.173 கோடியே 10 லட்சத்தில் முடிக்கப்பட்ட குடிநீர் திட்டப் பணிகள் மற்றும் செங்கல்பட்டு அருகே ஆத்தூர் கிராமத்தில் ரூ.40 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பயிற்சிமையம் ஆகியவற்றையும் முதல்வர் நேற்று தொடங்கி வைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x