Published : 22 Feb 2021 03:17 am

Updated : 22 Feb 2021 03:17 am

 

Published : 22 Feb 2021 03:17 AM
Last Updated : 22 Feb 2021 03:17 AM

எப்ஆர்எப்சிஎப் மைய நுழைவு வாயில் முன்பு ஒப்பந்த ஊழியர்கள் போராட்டம்

வாகன நிறுத்துமிடத்தில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தக் கோரி, கல்பாக்கத்தில் எப்ஆர்எப்சிஎப் மையத்தின் நுழைவு வாயில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்த ஊழியர்கள்.

கல்பாக்கம்

செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கத்தில் சென்னை அணுமின் நிலையம், இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையம் என பல்வேறு பிரிவுகளில் அணுமின் நிலையங்கள் மற்றும் ஆராய்ச்சி மையங்கள் இயங்கி வருகின்றன.

இந்நிலையில், எப்ஆர்எப்சிஎப் எனப்படும் அதிவேக எரிபொருள் சுழற்சி மையம் (Fast Reactor Fule cycle Facility) கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இதில், மாமல்லபுரம், வெங்கம்பாக்கம், புதுப்பட்டினம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணி புரிந்து வருகின்றனர்.


ஒப்பந்த ஊழியர்கள் பணிக்குச் செல்லும்போது தங்களது வாகனங்களை அணுமின் நிலைய நுழைவு வாயில் பகுதியில் நிறுத்திவிட்டு செல்லும் நிலை உள்ளது. அப்பகுதியில் நிழற்குடை, சிசிடிவி கேமரா போன்ற அடிப்படை வசதிகள் இல்லை எனக் கூறப்படுகிறது. இதனால், மோட்டார் சைக்கிள்கள் திறந்தவெளியில் நின்று சேதமடைவதாகவும் இதுவரை 7 வாகனங்கள் திருடுபோய் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால், வாகன நிறுத்துமிடத்தில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தக் கோரி ஒப்பந்த ஊழியர்கள் கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் எப்ஆர்எப்சிஎப் மையத்தின் நுழைவு வாயில்களை மூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த சதுரங்கப்பட்டினம் போலீஸார் ஒப்பந்த ஊழியர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில், அணுமின் நிலைய நிர்வாகத்திடம் தெரிவித்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என போலீஸார் உறுதியளித்தனர். இதையடுத்து, தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தாவிட்டால், மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்து ஒப்பந்த ஊழியர்கள் பணிக்குச் சென்றனர்.


Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x