

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறையில் மொழிபெயர்ப்புப்பிரிவு உதவி பிரிவு அலுவலர் பணிக்கு நடத்தப்பட்ட தேர்வின் முடிவுகள் அடுத்த வாரம் வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறையின் கீழ் மொழிபெயர்ப்பு பிரிவு இயங்கி வருகிறது. தமிழக அரசின் பல்வேறு துறை தொடர்பான ஆவணங்கள், அரசு கடிதங்கள் போன்றவை இங்கு மொழிபெயர்ப்பு செய்யப்படுகின்றன.
இங்கு இயக்குநர், இணை இயக்குநர், துணை இயக்குநர், உதவி இயக்குநர், பிரிவு அலுவலர், உதவி பிரிவு அலுவலர், உதவியாளர் என பல்வேறு நிலைகளில் அலுவலர்கள் பணியாற்றி வருகிறார்கள். உதவி பிரிவு அலுவலர் பதவியில் 5 காலியிடங்களை நிரப்பும்பொருட்டு (தமிழ்-4, இந்தி-1) கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி 11-ம் தேதி டிஎன்பிஎஸ்சி போட்டித்தேர்வு நடத்தியது.
300 மதிப்பெண்ணுக்கு மொழிபெயர்ப்பு தேர்வும், 200 மதிப்பெண்ணுக்கு பொதுஅறிவு தேர்வும் நடைபெற்றன. சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, நாகர்கோவில் உட்பட முக்கிய நகரங்களில் நடத்தப்பட்ட இத்தேர்வை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர்.
மொழிபெயர்ப்பு பிரிவு உதவி பிரிவு அலுவலர் தேர்வு முடிந்து ஓராண்டு ஆகியும் இன்னும் முடிவு வெளியிடப்படவில்லை. தேர்வு எழுதியவர்களின் எண்ணிக்கை குறைவு என்பதால் தேர்வு முடிவை விரைவில் வெளியிட்டுவிடுவார்கள் என்று தேர்வர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால், கடந்த ஆண்டு மார்ச் முதல் கரோனா தொற்று காரணமாக டிஎன்பிஎஸ்சி அலுவலகம் முழுமையாக செயல்படாததால் விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதில் சற்று தாமதமானது. கொள்குறிவகையிலான பொது அறிவு தேர்வு மதிப்பீடு விரைவாக முடிக்கப்பட்டுவிட்டது என்றாலும் மொழிபெயர்ப்புத்தேர்வு விரிவாக விடையளிக்கும் வகையில் அமைந்திருந்ததால் விடைத்தாள்களை மதிப்பீடு செய்வது கூடுதல் காலம் பிடித்தது.
தேர்வு முடிவு கடந்த நவம்பர் மாதத்தில் வெளியிடப்படும் என்று முன்பு அறிவித்திருந்தது. தற்போது டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் இரா.சுதன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மொழிபெயர்ப்பு உதவி பிரிவு தேர்வு முடிவுகள் பிப்ரவரி கடைசி வாரத்தில் வெளியிடப்படும் என குறிப்பிட்டுள்ளார். எனவே, தேர்வு முடிவுகள் அடுத்த வாரத்தில் வெளியாகும்.