Published : 22 Feb 2021 03:17 AM
Last Updated : 22 Feb 2021 03:17 AM

பிராந்திய மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பாஜக பாஜக இளைஞரணி தேசியத் தலைவர் பெருமிதம்

சேலம்

பிராந்திய மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது பாஜக தான் என சேலத்தில் நடந்த மாநாட்டில், பாஜக இளைஞரணி தேசியத் தலைவர் தேஜஸ்வி சூர்யா தெரிவித்துள்ளார்.

சேலத்தில் நடந்த பாஜக மாநில இளைஞரணி மாநாட்டில் பாஜக மாநிலத் தலைவர் முருகன் பேசும்போது, “கந்தசஷ்டி கவசத்தை அவமதித்தவர்களை கண்டித்து வேல் யாத்திரையை திருத்தணியில் தொடங்கினோம்.

அதே திருத்தணியில் திமுக தலைவர் ஸ்டாலினை வேல் ஏந்தவைத்து தமிழகத்தில் பாஜக தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது” என்றார். பாஜக இளைஞரணி தேசியத் தலைவர் தேஜஸ்வி சூர்யா பேசும்போது, “பாஜக-வை இந்தி மொழிக் கட்சி என்று திமுக பரப்புகிறது. ஆனால், கன்னடம் பேசும் எனக்கும், தமிழ் பேசும் வானதி சீனிவாசனுக்கும், பிற மொழி பேசுபவர்களுக்கும் பதவியைக் கொடுத்தது பாஜக-தான். பிராந்திய மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது பாஜக- தான்” என்றார்.

பாஜக மாநில துணைத் தலைவர் துரைசாமி பேசும்போது, “பாஜகவில் நான் இணைந்தபோது இனி தமிழகத்தில் பாஜக-வுக்கு போட்டி திமுக தான் என்றேன். இப்போது அந்நிலை வந்துவிட்டது” என்றார்.

துணைத் தலைவர் அண்ணாமலை பேசும்போது, “பெண்கள் விரும்பும் கட்சியாக பாஜக இருக்கிறது. பிஹார் தேர்தலில் பாஜக-வுக்கு வாக்களித்த 100-ல் 57 பேர் பெண்கள். தெலங்கானாவில் 100-ல் 54.5 பேர் பெண்கள். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிக்க இருப்பவர்களில் 100-ல் 57 பேர் பெண்கள்” என்றார்.

முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா பேசும்போது, “கேரளாவில் மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் எனும் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு வழங்கும் திட்டம் இல்லை. மேற்கு வங்கத் தில் விவசாயிகளுக்கான பிரதமர் நிதி உதவி திட்டம் இல்லை. தமிழகத்தில் மத்திய அரசுக்கு இணக்கமான அரசு அமையாவிட்டால், மத்திய அரசின் திட்டங்கள் வீடு வரை வந்து சேராது” என்றார்.

மாநில இளைஞரணி தலைவர் வினோத் பி.செல்வம் பேசும்போது, “பிரதமர் மோடியின் அரசால் மட்டுமே, தமிழர்களையும், தமிழையும் பாதுகாக்க முடியும்” என்றார்.மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு, வேல் மற்றும் முருகன் படம் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x