

தென்காசி அருகே பாட்டி, பேத்தி கொலை வழக்கில் 3 பெண்கள் உட்பட 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.
தென்காசி கீழப்புலியூரைச் சேர்ந்தவர் உச்சிமாகாளி. இவரது மனைவி கோமதி (55). இவர்களது மகள் சீதாலெட்சுமியை கடப்போகத்தியைச் சேர்ந்த முருகன் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தனர். முருகன் ராணுவத்தில் வேலை பார்க்கிறார். சீதாலெட்சுமியின் ஒன்றரை வயது மகள் உத்ரா என்ற சாக்க்ஷி கீழப்புலியூரில் பாட்டியின் பராமரிப்பில் இருந்தார்.
இந்நிலையில், கடந்த மாதம் 12-ம் தேதி கோமதி தனது பேத்தி உத்ராவுடன் காணாமல் போனார். பல்வேறு இடங்களில் தேடியும் இருவரையும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து உச்சிமாகாளி அளித்த புகாரின் பேரில், தென்காசி போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இருப்பினும், நீண்ட காலமாக துப்பு எதுவும் கிடைக்கவில்லை.
இந்நிலையில், கோமதியின் செல்போன் எண்ணுக்கு வந்த அழைப்புகளை ஆய்வு செய்ததில், அவர் காணாமல் போன தினத்தன்று கடைசியாக வேட்டைக்காரன்குளத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் மனைவி வீரபாண்டியம்மாள் (50) என்பவருடன் பேசியது தெரியவந்தது. அவரை போலீஸார் பிடித்து விசாரணை நடத்தினர். இதில், பணப் பிரச்சினையில் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து கோமதி, உத்ராவை அவர்கொலை செய்தது தெரியவந்தது.
வீரபாண்டியம்மாள் தனது மகள் இசக்கியம்மாள் திருமணத்துக்கு கோமதியிடம் இருந்து 20 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். அதற்கு வட்டியும், அசலுமாக சேர்த்து 40 ஆயிரம் ரூபாய் வரை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும் கூடுதல் வட்டி கேட்டு கோமதி அடிக்கடி பிரச்சினை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.
வீட்டுக்கு வந்து அவதூறாக பேசியதால் ஆத்திரமடைந்த வீரபாண்டியம்மாள் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து கோமதியை கொலை செய்ய முடிவு செய்துள்ளார். இந்நிலையில், கடந்த மாதம் 12-ம் தேதி கோமதியை செல்போனில் தொடர்புகொண்ட வீரபாண்டியம்மாள், கீழப்புலி யூரில் உள்ள தனது மகள் இசக்கியம்மாள் வீட்டுக்கு வந்து பணத்தை வாங்கிக்கொள்ளுமாறு கூறியுள்ளார்.
இதையடுத்து, பேத்தி உத்ராவுடன் கோமதி சென்றுள்ளார். அங்கு பேசிக்கொண்டு இருந்த போது, வீரபாண்டியம்மாள், அவரது மகன் சுரேஷ், மகள்கள் மகேஸ்வரி, இசக்கியம்மாள், வேட்டைக்காரன்குளத்தைச் சேர்ந்த உறவினர் பூதத்தான் ஆகியோர் சேர்ந்து திடீரென மிளகாய்ப் பொடியை கோமதி கண்ணில் வீசி, கழுத்தை நெரித்து கொன்றுள்ளனர்.
இதை பார்த்து உத்ரா அழுததால் வாளியில் உள்ள தண்ணீரில் மூழ்கடித்து குழந்தையையும் கொன்றுள்ளனர். பின்னர், இரவில் தனித்தனி மூட்டைகளில் இருவரின் சடலங்களையும் கட்டி, மத்தளம்பாறை அருகே உள்ள முத்துமாலைபுரத்தில் புதரில் வீசியுள்ளது விசாரணையில் தெரியவந்தது.
5 பேர் கைது