

கடலூரில், ‘அஞ்சலை அம்மாள் மன்றம்’சார்பில் சுதந்திர போராட்ட தியாகி அஞ்சலைஅம்மாளின் 60-வது ஆண்டு நினைவேந்தல் கூட்டம் நேற்று நடைபெற்றது.
நிகழ்வுக்கு அஞ்சலை அம்மாள் மன்றத்தின் தலைவர் மணிவாசகன் தலைமைதாங்கினார். தமிழ் மாநில காங்கிரஸ் கடலூர் மாவட்ட தலைவர் நெடுஞ்செழியன், அரசு அலுவலர் ஒன்றிய முன்னாள் தலைவர் சூரியமூர்த்தி, பாட்டளி தொழிற்சங்க பேரவை செயலாளர் முத்துக்குமார் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். அஞ்சலை அம்மாளின்பேத்தி மங்கையர்கரசி வர வேற்று பேசினார்.
தொழில்துறை அமைச்சர் சம்பத், மாநில மகிளா காங்கிரஸ் தலைவர் சுதா, திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில குழு உறுப்பினர் ஜான்சி ராணி, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் சந்தானம், தனவேல், குடந்தை தமிழ் பேரவை செயலாளர் பானுமதி, நாகர்கோவில் எழுத்தாளர் மலர்வதி, காங்கிரஸ் கட்சியின் மாநிலத் துணைத்தலைவர் பலராமன். ‘அஞ்சலை அம்மாள்’ குறித்து புத்தகம் எழுதிய ராஜா வாசுதேவன் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் பங்கேற்று, அவரின் தியாகச் செயல்களை நினைவு கூர்ந்தனர்.
அஞ்சலை அம்மாளின் போராட்ட வரலாறை இந்தியாவில் உள்ள அனைத்துமொழிகளிலும் அனைவரும் படிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். நாடாளுமன்றத்தில் அவரது சிலை வைக்க வேண்டும் என்றுகூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இந்நிகழ் வில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இதில் தமிழக அரசு, சுதந்திரப் போராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மாளின் தியாகத்தை போற்றும் வகையில் கடலூரில் நூலகத்துடன் கூடிய நினைவு இல்லம் அமைத்து தர வேண்டும். அவரது பிறந்த நாளான ஜூன் 1-ம் தேதியை அரசு விழாவாக கொண்டாட வேண்டும். அவரது நினைவு நாளான பிப்ரவரி 20-ம் தேதியும் அரசு கடைபிடிக்க வேண்டும். கடலூரில் அமைய உள்ள பேருந்து நிலையத்துக்கு அவரது பெயரை சூட்ட வேண்டும். அவரது வரலாறை அனைவரும் நினைவூட்டும் வகையில் கடலூர் மாவட்டத்தில் ஏதாவது ஒரு அரசு பள்ளிக்கு அவரது பெயரை சூட்ட வேண்டும். அவரது வரலாறை தமிழக அரசு பாட புத்தகத்தில் இடம் பெற செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.