

டீசல் விலையைக் குறைக்க வேண்டும். சுங்கச் சாவடிகளை முறைப்படுத்த வேண்டும் எனபன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 26-ம் தேதி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம் என தென்மாநில லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சண்முகப்பா தெரிவித்துள்ளார்.
கூட்டமைப்பின் தென்மாநில நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் சேலத்தில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்துக்கு பின்னர் சண்முகப்பா கூறியதாவது:
டீசல் விலையை கட்டுப்படுத்த தமிழக அரசு வாட் வரியை குறைக்க வேண்டும். மத்திய அரசு டீசல் விலையை குறைக்க வேண்டும். மேலும், 15 ஆண்டுகளான வாகனங்களை அழிக்க வேண்டும் என்ற மத்திய அரசின் முடிவை திரும்பப் பெற வேண்டும்.
ஃபாஸ்ட்டேக் முறையால் லாரி உரிமையாளர்கள் பாதிக்கப் பட்டுள்ளனர். சுங்கச் சாவடிகளில் தனியாக பணம் செலுத்திட ஏதுவாக ஒரு வழியை கொடுக்க வேண்டும்.கோரிக்கை தொடர்பாக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால், மார்ச் 15-ம் தேதி பெங்களூருவில் நடைபெறும் மாநாட்டில், தென் மாநில லாரி உரிமை யாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்வோம். மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வரும் 26-ம் தேதி ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் லாரி உரிமையாளர்கள் ஈடுபட்டு, அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் கோரிக்கை மனு அளிக்கவுள்ளோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.