கோழிப் பண்ணை அமைக்க வாங்கிய வங்கிக் கடனை தள்ளுபடி செய்ய கோரிக்கை

கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகத்தில் கறிக்கோழி பண்ணை உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை மனு அளித்தனர். 		            படம்: எஸ்.கே.ரமேஷ்
கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகத்தில் கறிக்கோழி பண்ணை உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை மனு அளித்தனர். படம்: எஸ்.கே.ரமேஷ்
Updated on
1 min read

கூட்டுறவு மற்றும் தேசிய வங்கிகளில் கோழிப் பண்ணை அமைக்க வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என கறிக்கோழி பண்ணை உரிமையாளர்கள் சங்கத் தினர், கிருஷ்ணகிரி ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

கிருஷ்ணகிரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டம் கறிக்கோழி பண்ணை உரிமையாளர்கள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், கவுரவத் தலைவர் சரவணன், செயலாளர் பெரியண்ணன், பொருளாளர் தங்கவேலு ஆகியோர் தலைமையில் 50-க்கும் மேற்பட்டவர்கள் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணை செயல்பட்டு வருகிறது. இந்த பண்ணைகள், 10 ஆயிரம் குடும்பங்களுக்கு வாழ்வாதாரமாக உள்ளது. கோழிப்பண்ணைகளை பெரும்பாலும் விவசாயிகள் அமைத்துள்ளனர். கோழிப் பண்ணை அமைக்க, கூட்டுறவு மற்றும் தேசிய வங்கிகளில் கடனை பெற்றுள்ளோம். கரோனா ஊராடங்கின் போது கோழிப் பண்ணைகள் செயல்பட வில்லை. அப்போது, கோழிகளை வளர்க்க முடியாமல், விற்பனை செய்யப்படாததால் கோழிகளை உயிருடன் ஜேசிபி இயந்திரம் மூலம் குழி தோண்டி புதைத்தோம். மேலும், கோழிகளுக்கு நோய் தாக்குதல் ஏற்படுவதால் அதிகளவில் இழப்புகளை சந்தித்து வருகிறோம்.

தமிழக அரசு விவசாய கடனை தள்ளுபடி செய்தது போல், பண்ணை அமைக்க வாங்கிய கடன்களையும் தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்நிலையில் வங்கிகளில் வாங்கிய கடனை செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். மறைந்த முதல்வர்கள் ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் ஏற்கெனவே கோழிப் பண்ணை அமைக்க வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்துள்ளனர்.

எனவே, தமிழக முதல்வர், எங்களது கோழிப் பண்ணை அமைக்க வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். எங்களது வாழ்வாதாரம் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in