போலீஸாரின் பணிகளை பதிவு செய்ய உடலில் அணியும் நவீன கேமரா 27 பேருக்கு தூத்துக்குடி எஸ்பி வழங்கினார்

போலீஸாரின் பணிகளை பதிவு செய்ய  உடலில் அணியும் நவீன கேமரா  27 பேருக்கு தூத்துக்குடி எஸ்பி வழங்கினார்
Updated on
1 min read

தூத்துக்குடி மாவட்டத்தில்காவல்துறையினர் மேற்கொள்ளும் பணிகளை கண்காணிக்க உடலில் அணியும் 27 கேமராக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் நேற்று காவல்துறையினருக்கு வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினரின் பயன்பாட்டுக்கென தமிழக அரசு ரூ.3.78 லட்சம் மதிப்பிலான 27 உடலில் அணியும் புதிய நவீன ரக கேமராக்களை (Body Worn Camera) வழங்கியுள்ளது. இந்த கேமராக்களை காவல்துறையினர் தங்கள் சட்டையில் அணிந்து கொண்டு பணிகளை மேற்கொள்ளும்போது அந்த இடத்தில் நடைபெறும் சம்பவங்களை வீடியோ, ஆடியோ, புகைப்படமாக பதிவு செய்யும் வசதி உள்ளது.

இதை காவல்துறையினர் வாகன சோதனை, மனு விசாரணை, ரோந்து செல்லுதல், போக்குவரத்து சீர் செய்தல் போன்ற பல்வேறு வகையான பணிகளுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். இது காவல்துறையினருக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.

முதல் கட்டமாக ஒரு காவல் நிலையத்துக்கு 3 கேமராக்கள் வீதம் தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முக்கிய காவல் நிலையங்களான தூத்துக்குடி தென்பாகம், வடபாகம், முறப்பநாடு, வைகுண்டம், ஆறுமுகநேரி, திருச்செந்தூர், கோவில்பட்டி கிழக்கு, கோவில்பட்டி மேற்கு மற்றும் விளாத்திகுளம் ஆகிய 9 காவல் நிலையங்களுக்கு 27 கேமராக்களை எஸ்பி ஜெயக்குமார் நேற்று வழங்கினார். அப்போது கேமராக்களின் செயல்பாடு குறித்தும், அதனை பயன்படுத்தும் முறை குறித்தும் விளக்கினார்.

நிகழ்ச்சியில் ஏடிஎஸ்பிக்கள் கோபி, செல்வன், தொழில்நுட்பப் பிரிவு காவல் ஆய்வளார் கிருஷ்ணசாமி, உதவி ஆய்வாளர்கள் ஆறுமுகம், மகேஷ் மற்றும் தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து ஆகியோர் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in