

மத்திய அரசு கொண்டுவரும் கலப்பு மருத்துவ முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து விருதுநகரில் பொது மருத்துவர்கள் மற்றும் பல் மருத்துவர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
இந்திய மருத்துவ சங்கம் மற்றும் இந்திய பல் மருத்துவ சங்க விருதுநகர் மாவட்டக் கிளை சார்பில் விருதுநகர் அரசு மருத்துவமனை அருகே நடந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு இந்திய மருத்துவ சங்கத்தின் தென் மண்டலத் துணைத் தலைவர் தனபால் தலைமை வகித்தார். இந்திய பல் மருத்துவர் சங்க நிர்வாகி ரவிசங்கர், மருத்துவர்கள் போஸ், ஜவஹர்லால், ராமநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்க மாநிலத் தலைவர் செந்தில், பல் மருத்துவர்கள் சங்கப் பொதுச் செயலர் ரவீந்திரநாத் ஆகியோர் சிறப்புரையாற்றினர். அப்போது, மத்திய அரசின் கலப்பு மருத்துவத் திட்டத்தை திரும்பப்பெறக் கோரியும், மத்திய அரசு நிதி ஆயோக் மூலம் மருத்துவக் கல்வி நடைமுறை, பொது ஆரோக்கியம் மற்றும் ஆராய்ச்சி ஆகியவற்றை இணைப்பதால் குழப்பமான சூழ்நிலை உருவாவதைத் தடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொது மற்றும் பல் மருத்துவர்கள் பலர் கலந்துகொண்டனர்.