

உலக சாதனை படைக்கும் நோக்கத்துடன், கராத்தேயில் உள்ள பல்வேறு தாக்குதல் உத்திகளை ஒரு மணி நேரத்தில் 900 முறை பயன்படுத்தி 8 வயது சிறுமி அழகினி புதிய சாதனை நிகழ்த் தியுள்ளார்.
சேலம் மாவட்டம் மேட்டூரைச் சேர்ந்த தங்கராஜ்- அபிராமி தம்பதியின் மகள் அழகினி. 3-ம் வகுப்பு பயிலும் அழகினி, உலக சாதனை நிகழ்த்தும் நோக்கத்துடன், மேட்டூர் மாதையன் குட்டையில், அரசு அலுவலர்கள்,கராத்தே மாஸ்டர்கள், சிலம்ப மாஸ்டர்கள் முன்னிலையில், உலக சாதனைக்காக, கராத்தே மற்றும் சிலம்பத்தில் குறைந்த நேரத்தில் அதிக உத்திகளை செய்து காண்பித்து, புதிய சாதனையை நிகழ்த்தினார்.
இதுதொடர்பாக சிறுமி அழகினி யின் பெற்றோர் கூறியதாவது:
அழகினி, இரண்டரை வயதில் இருந்தே கராத்தே பயிற்சி பெற்று வருகிறார். 4 வயதை எட்டியபோது 3 டான் பிளாக் பெல்ட்-ஐ வென்று, குறைந்த வயதில் பிளாக் பெல்ட் பெற்றவர் என்ற சாதனையை 2017-ம் ஆண்டில் படைத்து, இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ், இண்டியன் அச்சிவர்ஸ் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் ஆகியவற்றில் சாதனையை பதிவு செய்தார்.
தற்போது, உலக சாதனை படைக்கும் நோக்குடன், கராத்தேவில் உள்ள குமிட், காம்பி னேஷன், த்ரீ ஸ்டெப் காம்பினேஷன், கட்டா பிரிவுகளில் கராத்தே உத்தி களை ஒரு மணி நேரத்தில் 900 தடவை பயன்படுத்தி, சாதனை நிகழ்த்தினார். தொடர்ந்து, சிலம்பம் சுற்ற ஆரம்பித்த அழகினி, அதில் தனி விளையாட்டு, மான் கராத்தே, சுருள் வாள், ஒற்றைப் பந்தம் (தீப்பந்தம்), இரட்டைப் பந்தம், செயின் பந்தம் என பல உத்திகளை செய்து, அனைவரின் பாராட்டுதல்களை பெற்றுள்ளார், என்றனர்.
சிறுமி அழகினி கூறுகையில், என்னுடைய அம்மா அபிராமி, அகில இந்திய கராத்தே சங்க செயலாளராக இருக்கிறார். எனவே, சிறு வயதில் இருந்தே எனக்கு கராத்தே கலையை பயிற்றுவித்து வரு கிறார். எனக்கு ஓட்டப்பந்தய வீராங்கனை ஆக வேண்டும் என்பது தான் குறிக்கோள். அதற்கான பயிற்சிகளை மேற்கொள்ள இருக்கிறேன், என்றார்.