

சேலம் மாவட்டத்தில், முதல் கட்டமாக கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட முன்களப் பணியாளர்கள் 16,617 பேருக்கு, 2-வது கட்டமாக தடுப்பூசி போடும் பணி நேற்று தொடங்கியது.
நாடு முழுவதும் முன்களப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணி, கடந்த ஜனவரி 16-ம் தேதி தொடங்கியது. சேலம் மாவட்டத்தில், மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்கள் 26,318 பேருக்கு முதல் கட்ட கரோனா தடுப்பூசி போடுவதற்கு பட்டியல் தயாரிக்கப்பட்டிருந்தது. எனினும், முன்களப் பணியாளர்களில் பலர் தடுப்பூசி போட்டுக் கொள்வதில் ஆர்வம் செலுத்தவில்லை.
எனவே, வருவாய்த்துறை, காவல்துறை ஊழியர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வந்தது. மாவட்ட ஆட்சியர் ராமனும் தடுப்பூசி போட்டுக் கொண்டார். எனினும், மாவட்டத்தில் முதல் கட்ட கரோனா தடுப்பூசியை நேற்று முன்தினம் வரை 16,617 நபர்கள் மட்டுமே போட்டுக் கொண்டனர்.
முதல் கட்ட தடுப்பூசி போடத் தொடங்கி, 28 நாட்கள் கடந்துவிட்ட நிலையில், 2-வது கட்ட தடுப்பூசி போடும் பணி நேற்று தொடங்கியது. சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மேட்டூர் அரசு தலைமை மருத்துவமனை, ஆத்தூர் அரசு மருத்துவமனை என 21 மையங்களில் 2-ம் கட்ட கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் டாக்டர் செல்வகுமார், சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் தனபால் உள்ளிட்ட பலர் 2-வது கட்ட கரோனா தடுப்பூசியை நேற்று போட்டுக் கொண்டனர்.
இது தொடர்பாக சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் டாக்டர் செல்வகுமார் கூறுகையில், ‘முதல் கட்ட கரோனா தடுப்பூசியை போட்டுக்கு கொண்டவர்கள், 28 நாட்களுக்குப் பின்னர் 45 நாட்களுக்குள் 2-வது கட்ட தடுப்பூசியை போட்டுக் கொள்ள வேண்டும். முதல் கட்ட தடுப்பூசியை போட்டுக் கொண்டவர்களுக்கு, 2-வது கட்ட தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டியது குறித்த நினைவூட்டல், அவர்களது செல்போனுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படு கிறது. முதல் கட்ட தடுப்பூசியை போட்டுக் கொண்ட மையம் மட்டுமின்றி, வேறு மையத்திலும் 2-வது கட்ட தடுப்பூசியை போட்டுக் கொள்ளலாம்’ என்றார்.