புதுக்கோட்டை அருகே சாலையோர தடுப்பில் கார் மோதி அமமுக பிரமுகர், மகன் உயிரிழப்பு

புதுக்கோட்டை அருகே சாலையோர தடுப்பில் கார் மோதி  அமமுக பிரமுகர், மகன் உயிரிழப்பு
Updated on
1 min read

புதுக்கோட்டை அருகே சாலையோர இரும்புத் தடுப்பில் கார் மோதியதில் சென்னையைச் சேர்ந்த அமமுக பிரமுகர், அவரது 2 வயது மகன் உயிரிழந்தனர். மேலும் 7 பேர் காயமடைந்தனர்.

சென்னை வேளச்சேரி பகுதியைச் சேர்ந்தவர்கள் எம்.பாலையா(68), இவரது மனைவி லட்சுமி(50), இவர்களது மகள் சிவகாமி(22), ராமன்(30), இவரது மனைவி ஜெயந்தி(25), இவர்களது மகன் ரட்சன்(2), நந்தினி(30), சுரேஷ் மகன் தர்வேஸ்(5). இவர்கள் அனைவரும் நேற்று முன்தினம் இரவு சிவகங்கை மாவட்டம் காரைக்குடிக்கு காரில் புறப்பட்டனர்.

காரை, சென்னை திருவொற்றியூர் சீனிவாசநகரைச் சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் சிலம்பரசன்(34) ஓட்டினார்.

இவர்கள், புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் புறவழிச் சாலையில் பொக்கன்குளம் எனும் இடத்தில் நேற்று அதிகாலை வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை மீறி சாலையோர இரும்புத் தடுப்பில் கார் மோதியது. இதில், ராமன், அவரது மகன் ரட்சன் ஆகியோர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும், காயம் அடைந்த ஓட்டுநர் உட்பட 7 பேரும் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து கீரனூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

விபத்தில் உயிரிழந்த ராமன், அமமுகவில் திருவொற்றியூர் கிழக்கு பகுதி செயலாளராக இருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in