

கிருஷ்ணகிரியில் சமையல் மாஸ்டர் குத்திக்கொலை செய்யப் பட்ட வழக்கில், இளைஞர்கள் 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.
மதுரை மாவட்டம் செக்கா னூரணி கிராமத்தைச் சேர்ந்த சமையல் மாஸ்டர் ஜெயமணி (60). இவரது நண்பர் மதுரை மேலூர் சிட்டம்பட்டியைச் சேர்ந்த கார் ஓட்டுநர் தேவ பாண்டியன் (30). இவர்கள் கிருஷ்ணகிரியில் ஒரே வீட்டில் தங்கியிருந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம், இவர்களது வீட்டுக்கு வந்த மர்ம நபர்கள் ஜெயமணி, தேவபாண்டியனை கத்தியால் குத்தினர். இதில், ஜெயமணி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். தேவபாண்டியன் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுதொடர்பாக, கிருஷ்ணகிரி நகர போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இக்கொலை வழக்கில், கிருஷ்ணகிரி அடுத்த பில்லன குப்பம் பகுதியைச் சேர்ந்த அகர் நிவாஸ் (23), குந்தாரப்பள்ளி கூட்டுரோடு பகுதியைச் சேர்ந்த அகில் எ) அகிலன் (25) ஆகியோரை கைது செய்தனர். கொலைக்கான காரணம் குறித்து போலீஸார் கூறும்போது, பெண்கள் தொடர்பான தகராறில் கொலை நடந்துள்ளதாக தெரிவித்தனர்.