

மழையால் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு 80 சதவீத இழப்பீட்டு தொகையை காப்பீட்டு நிறுவனங் கள் வழங்க வேண்டும் என தமிழக காவிரி விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.
திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே இருள்நீக்கி கிராமத்தில் உள்ள விளைநிலங்களில் பயிர்க் காப்பீட்டு நிறுவன அலுவலர்களுடன், வேளாண் துறை மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் மழையால் சேதமடைந்த நெற்பயிர்களில் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து நேற்று கணக்கெடுப்பு நடத்தினர்.
இதில், இருள்நீக்கி கிராமத்தில் உள்ள தமிழக காவிரி விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் மற்றும் மாரிமுத்து ஆகியோருக்கு சொந்தமான நிலங்களில் அதிகாரிகள் பயிர் பாதிப்பு குறித்து கணக்கெடுப்பு நடத்தினர். இந்த கணக்கெடுப்பின்போது, மழையில் சேதமடையாத பகுதியில் உள்ள நெற்பயிரை மட்டும் அறுவடை செய்து ஆய்வு நடத்தி விட்டு அதிகாரிகள் புறப்பட்டுச் சென்றனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பி.ஆர்.பாண்டியன் கூறியது:
காப்பீட்டு நிறுவன அலுவலர் களுடன், வேளாண் துறை அதிகாரி களும் இணைந்து பாதிக்கப்பட்ட பயிர்களை முழுமையாக கணக் கெடுக்காமல் தட்டிக் கழிக்கின்றனர்.
விவசாயிகளுக்குத் தெரியாமல் கணக்கெடுப்பு நடத்துவதுடன், நன்கு விளைந்த பகுதிகளை மட்டுமே ஆய்வுக்கு உட்படுத்துகின்றனர். இதனால், விவசாயிகள் பாதிப்பு அடைந்து வருகின்றனர். எனவே, தமிழக அரசு பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏற்கெனவே 80 சதவீத அளவுக்கு நிவாரணம் வழங்கியதுபோல, காப்பீட்டு நிறுவனங்களும் பயிர் பாதிப்புக்கு 80 சதவீதம் பயிர்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்றார்.