மக்களுக்கு வழங்கப்படாமல் பூட்டிவைக்கப்பட்டு வீணாகியதால் கஜா புயல் நிவாரணப் பொருட்கள் குழிதோண்டி புதைப்பு
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படாமல் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பூட்டி வைக்கப்பட்டிருந்த நிவாரணப் பொருட் கள் வீணாகியதால், அவை நேற்று குழிதோண்டி புதைக்கப்பட்டன.
கடந்த 2018-ம் ஆண்டு வீசிய கஜா புயலால் தஞ்சாவூர், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மிகவும் பாதிக்கப்பட்டன. இதையடுத்து, பாதிக்கப்பட்ட 4.68 லட்சம் ரேஷன் கார்டுதாரர் களுக்கு அரசு சார்பில் அரிசி, சர்க்கரை, சமையல் எண்ணெய் உள்ளிட்ட 27 அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டன.
மேலும், தொண்டு நிறுவனங் கள், தன்னார்வலர்கள் வழங்கிய பொருட்களையும் அரசே பெற்று, விநியோகம் செய்தது. அந்த வகையில், தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டத்துக்குட்பட்ட 58 ஊராட்சிகளில் விடுபட்ட வர்களுக்கு வழங்க அரசு சார்பில் அனுப்பி வைக்கப்பட்ட நிவாரணப் பொருட்கள், வட்டாட்சியர் அலுவல கத்தில் உள்ள குடோனில் இருப்பு வைக்கப்பட்டிருந்தன. அங்கு போதிய இடமில்லாததால், ஒரத்தநாடு புதூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உள்ள 2 பெரிய அறைகளிலும் நிவாரணப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன.
கடந்த 2 ஆண்டுகளாக அந்தப் பொருட்கள் பாதிக்கப்பட்டோருக்கு வழங்கப்படாமல், அறையிலேயே பூட்டி வைக்கப்பட்டிருந்த நிலை யில், கடந்த சில நாட்களாக அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசியது. தகவலறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன் அங்கு சென்று பார்வையிட்டபோது, அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் வீணாகி, துர்நாற்றம் வீசியது தெரியவந்தது. மேலும், தார்ப்பாய், பிளாஸ்டிக் வாளிகள் போன்றவற்றை எலிகள் கடித்துக் குதறியிருந்தன. இதுதொடர்பாக, உயர் அதிகாரிகளுக்கு முருகன் தகவல் தெரிவித்தார்.
பின்னர், வருவாய்த் துறை மற்றும் உள்ளாட்சித் துறை ஊழியர்கள் நேற்று ஊராட்சி மன்ற அலுவலகத்தின் அருகே 20 அடி ஆழத்துக்கு குழி தோண்டி, அதில் வீணாகிப் போன நிவாரணப் பொருட்களை போட்டு, புதைத்தனர்.
இதுகுறித்து ஒரத்தநாடு வட்டாட்சியர் கணேஷ்வரனிடம் கேட்டபோது, “பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது போக, மீதியுள்ள பொருட்கள் ஒரத்தநாடு புதூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்தன. அவற்றில் துர்நாற்றம் வீசியதால் இடமாற்றி வைக்க அறிவுறுத்தப்பட்டது. குழிதோண்டி புதைத்ததாகக் கூறப்படுவது குறித்து விசாரிக்கி றேன்” என்றார்.
