

கிருஷ்ணகிரியில் சமையல் மாஸ்டரை கத்தியால் குத்திக் கொலை செய்த கும்பல், உடனிருந்த ஓட்டுநரை குத்திவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பி யோடிய சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள செக்கானூரணியைச் சேர்ந்த சமையல் மாஸ்டர் ஜெயமணி (60). இவர் கிருஷ்ணகிரியில் ஜக்கப்பன் நகர் முதலாவது கிராசில் வாடகை வீட்டில் தங்கி, சமையல் செய்யும் தொழில் செய்து வந்தார். இவருடன் மதுரை மேலூர் அருகே உள்ள சிட்டம்பட்டியைச் சேர்ந்த கார் ஓட்டுநர் தேவபாண்டியன் (30) என்பவரும் தங்கி இருந்தார்.
நேற்று இரவு இருவரும் வீட்டில் இருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் ஜெயமணியைக் கத்தியால் குத்திக் கொலை செய்தனர். அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த தேவபாண்டியனையும் கத்தியால் குத்திவிட்டு தப்பியோடினர். சத்தம் கேட்டு அங்கு வந்த அப்பகுதி மக்கள், போலீஸாருக்கு தகவல் அளித்தனர்.
நிகழ்விடத்துக்கு வந்த கிருஷ்ணகிரி டிஎஸ்பி சரவணன் மற்றும் நகர போலீஸார், படுகாயங்களுடன் இருந்த தேவபாண்டியனை மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.