

திருவாரூர் மாவட்டம் சங்கேந்தியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன்(61). திருச்சி, புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் மாவட்ட தீயணைப்பு அலுவலராக பணியாற்றிய இவர் மீது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் 31.8.2018-ல் தஞ்சாவூரில் பணியாற்றியபோது பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி மணிகண் டன் தலைமையிலான போலீஸார் நேற்று பிற்பகல் முதல் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக சிந்தாமணி குடியிருப்பில் உள்ள ரவிச்சந்திரனின் வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதேபோல, தஞ்சாவூர் அம்மா குளத்தில் உள்ள ரவிச்சந்திரனின் மற்றொரு வீடு, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊரிலும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தினர்.