

தஞ்சாவூர் அருகே மாரியம்மன் கோவில் கிராமத்தின் கடைவீதியில் வணிகர் சங்க உறுப்பினர் கணேசன் என்பவர் கோழி இறைச்சி விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு நேற்று முன்தினம் இரவு இறைச்சி வாங்க வந்த ஒரு நபரிடம், அப்பகுதியைச் சேர்ந்த ராஜா மற்றும் சிலர் தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது. இதை கணேசன் தட்டிக்கேட்டுள்ளார்.
இதற்கிடையே, தகராறு குறித்து தகவலறிந்து சமாதானப்படுத்தச் சென்ற மாரியம்மன் கோவில் வணிகர் சங்கத் தலைவர் அன்பு, செயலாளர் லாரன்ஸ் ஆகியோரை ராஜா தரப்பினர் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த இருவரும் தஞ்சாவூர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து தஞ்சாவூர் தாலுகா போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, வணிகர் சங்க நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வலியுறுத்தி மாரியம்மன் கோவிலில் நேற்று வணிகர்கள் கடை யடைப்பு போராட்டம் நடத்தினர். அவர்களுடன் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தியதால் போராட்டம் கைவிடப்பட்டது.