கிருஷ்ணகிரியில் ஹெலிகாப்டரிலிருந்து மலர் தூவி சசிகலாவை வரவேற்க அனுமதி கோரி மனு

கிருஷ்ணகிரியில் ஹெலிகாப்டரிலிருந்து மலர் தூவி சசிகலாவை வரவேற்க அனுமதி கோரி மனு
Updated on
1 min read

கர்நாடக மாநிலம் பெங்களூரு சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ள சசிகலா, பெங்களுருவில் தங்கி ஓய்வெடுத்து வருகிறார். அவர் நாளை(8-ம் தேதி) சென்னை திரும்புகிறார்.

பெங்களூருவில் இருந்து கார் மூலம் கிருஷ்ணகிரி வழியாக சென்னை செல்லும் சசிகலாவுக்கு, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 11 இடங்களில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் வரவேற்பு அளிக்க உள்ளனர்.

ஜூஜூவாடி, ஓசூர் தர்கா, ஈஸ்வர் நகர், வசந்த் நகர், சூளகிரி தேசிய நெடுஞ்சாலை, குருபரப்பள்ளி தேசிய நெடுஞ்சாலை, குந்தாரப்பள்ளி கூட்ரோடு, கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி, ஆவின் பாலம், தொன்னையன் கொட்டாய் (தமிழ்நாடு ஓட்டல் அருகில்), கந்திகுப்பம் உள்ளிட்ட 11 இடங்களில் வரவேற்பு அளிக்க உள்ளதாகவும், இதற்காக அனுமதி அளிக்கும்படி கேட்டு அமமுக-வினர் காவல்துறையினரிடம் மனு அளித்துள்ளனர்.

தமிழ்நாடு தியாகத்தலைவி சின்னம்மா பேரவை சார்பில் கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் சக்திவேல் என்பவர் கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகம் மற்றும் எஸ்பி அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், பர்கூர் - அங்கிநாயனப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் பர்கூர் அண்ணா நகர் அருகில் சசிகலாவுக்கு வரவேற்பு அளிக்கிறோம்.

அப்போது தனியார் வாடகை ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவ உள்ளோம். இதற்கு அனுமதி வழங்க வேண்டும், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக காவல்துறையினர் கூறும்போது, ‘‘ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவ உரிய விவரங்களுடன் மனு அளிக்கப்படவில்லை,’’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in