

தஞ்சாவூர் அருகே நண்பரின் வீட்டில் பணத்தை திருடியதாகக் கூறி, இளைஞரின் கண்களை துண்டால் கட்டி, சிலர் கம்பால் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதுதொடர் பாக, 3 பேரை கைது செய்துள்ள போலீஸார், தலைமறைவான 4 பேரை தேடி வருகின்றனர்.
தஞ்சாவூர் அருகே அம்மா பேட்டை பூண்டி மேலத் தெருவைச் சேர்ந்தவர் குணசேகரன் மகன் ராகுல்(22). பக்கத்து ஊரான கோனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன்(25). ஆற்றில் மணல் அள்ளும் கூலி வேலை செய்து வரும் இருவரும் நண்பர்கள்.
கடந்த பிப்.1-ம் தேதி லட்சுமணன் வீட்டில் இருந்த ரூ.30 ஆயிரம் ரொக்கத்தை காணவில்லை எனக் கூறப்படுகிறது. இந்தப் பணத்தை ராகுல் எடுத்திருக்கலாம் எனக் கருதிய லட்சுமணன் மற்றும் அவரது நண்பர்கள் சிலர், ராகுலை அழைத்து விசாரித்துள்ளனர். அப்போது, ராகுல் பணம் எடுக்க வில்லை எனக் கூறியுள்ளார். ஆனால், அவரது கண்களை துண்டால் கட்டிய லட்சுமணன் மற்றும் அவரது நண்பர்கள், அவரை கம்பால் கடுமையாக தாக்கியுள்ளனர்.
மேலும், இந்த தாக்குதலை லட்சுமணனின் நண்பர்களே செல்போன் மூலம் வீடியோ பதிவுசெய்து, கடந்த 3-ம் தேதி சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ வைரலானது. வீடியோ பதிவைப் பார்த்த ராகுல், அன்றைய தினமே எலி மருந்தை தின்று, தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக வீட்டிலிருந்தவர்கள் அவரை மீட்டு, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
ராகுல் அடிவாங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியா னதைப் பார்த்த அம்மாபேட்டை போலீஸார், ராகுலிடம் புகாரைப் பெற்று, லட்சுமணன் உட்பட 7 பேர் மீது கொலை முயற்சி, வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இவர்களில் கோனூரைச் சேர்ந்த ராஜதுரை(24), பார்த்திபன்(25), சரத்(24) ஆகிய 3 பேரை நேற்று முன்தினம் இரவு போலீஸார் கைது செய்தனர். மேலும், லட்சுமணன், மாரியம்மன் கோவிலைச் சேர்ந்த விக்கி உட்பட 4 பேரை தேடி வருகின்றனர்.