விதிகளை மீறி எஸ்சி, எஸ்டி துறை மூலம் நடத்தப்பட்ட 42 சமையலர் பணியிட நேர்காணலை ரத்து செய்க தி.மலை டிஆர்ஓவிடம் விண்ணப்பதாரர்கள் கோரிக்கை

எஸ்சி, எஸ்டி துறை மூலம் நடத்தப்பட்ட சமையலர் பணியிட நேர்காணலை ரத்து செய்யக்கோரி மாவட்ட வருவாய் அலுவலர் முத்துகுமாரசாமியிடம் மனு அளித்த விண்ணப்பத்தாரர்கள்.
எஸ்சி, எஸ்டி துறை மூலம் நடத்தப்பட்ட சமையலர் பணியிட நேர்காணலை ரத்து செய்யக்கோரி மாவட்ட வருவாய் அலுவலர் முத்துகுமாரசாமியிடம் மனு அளித்த விண்ணப்பத்தாரர்கள்.
Updated on
1 min read

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை மூலம் 42 சமையலர் பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட நேர்காணலை ரத்து செய்ய வேண்டும் என தி.மலை டிஆர்ஓ முத்துகுமாரசாமியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் சேதுராமன், சரவணன், ராஜராஜேஸ்வரி, சிவமணி, கலையரசன், தீபக் மற்றும் பொது நல மனுதாரர் கண்ணன் உள்ளிட்டவர்கள் ஆட்சி யர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட வருவாய் அலுவலர் முத்துகுமாரசாமியிடம் நேற்று அளித்துள்ள மனுவில், “தி.மலை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை மூலம் காலியாக உள்ள 42 சமையலர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, மாவட்டம் முழுவதும் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்தனர்.

சமையலர் பணியிடங்களை நிரப்ப ஆண்கள், பெண்கள், விதவைகள், முன்னாள் ராணுவவீரர் குடும்பத்தினர் போன்றவர் களுக்கான இட ஒதுக்கீடு முறை பின்பற்றவில்லை. மேலும் விதிகள் மீறப்பட்டுள்ளன. பல லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டு பணி நியமனம் செய்யப்படுவதாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர், லஞ்ச ஒழிப்புத் துறை மற்றும் சென்னை ஆதிதிராவிடர் நலத்துறை ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், முறைகேடு களை தவிர்க்க, சென்னையில் இருந்து ஆதிதிராவிடர் நலத் துறையின் உயர் அதிகாரிகள் முன்னிலையில் திருவண்ணா மலை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலகத்தில் சமையலர் பணிக்கு கடந்த 1, 2-ம் தேதிகளில் நேர்காணல் நடை பெற்றுள்ளது. இதற்கிடையில், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கதிர்சங்கர், தருமபுரி மாவட் டத்துக்கு கடந்த 3-ம் தேதி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். விதிகளை பின்பற்றாமல் நடத்தப்பட்டுள்ள நேர்காணலை ரத்து செய்து, முறைகேடு செய்தவர்கள் மீது ஆட்சியர் சந்தீப் நந்தூரி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கேட்டுக் கொண்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in