

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் சேர்மன் அருணாசல சுவாமிகோயிலில் தை அமாவாசைத்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நேற்று கோயில் நடை அதிகாலை திறக்கப்பட்டு, ஹோமம் மற்றும் சுவாமிக்கு பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்றன. அலங்கார தீபாராத னைக்கு பின் கோயில் முன் மண்டபத்தில் கோயில் பரம்பரை அக்தார் கருத்தப்பாண்டியன் திருவிழாவுக்கான கொடியேற்றி வைத்தார். திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
2-ம் திருநாள் முதல் 9-ம் திருநாள் வரை காலை மற்றும் இரவு சுவாமி சிறப்பு அலங்காரங்களுடன் எழுந்தருளி பவனி நடைபெறும். 10-ம் நாள் திருவிழாவான பிப்ரவரி 11-ம் தேதி தை அமாவாசை தினத்தில் பிற்பகல் ஒரு மணிக்கு சுவாமி உருகு பலகை தரிசனம் மற்றும் அபிஷேகம் நடைபெறும். மாலை 5 மணிக்கு இலாமிச்சவேர் சப்பரத்தில் சேர்மத் திருக்கோலக் காட்சியும், இரவு 10 மணிக்கு கற்பக பொன் சப்பரத்தில் சிவப்பு சார்த்தி தரிசனமும் நடைபெறும்.
12-ம் தேதி காலை 5 மணிக்கு வெள்ளை சார்த்தி தரிசனமும், காலை 9 மணிக்கு பச்சை சார்த்தி அபிஷேகம் மற்றும் பிற்பகல் ஒரு மணிக்கு பச்சை சார்த்தி தரிசனமும் நடைபெறுகிறது. மாலையில் ஏரல் சவுக்கை முத்தாரம்மன் கோயில் பந்தலில் தாக சாந்தியும், இரவு 10 மணிக்கு திருக்கோயில் மூலஸ்தானம் சேரும் ஆனந்தக்காட்சியும் நடைபெறும்.
13-ம் தேதி 12-ம் திருநாளில் காலை தாமிரபரணி ஆற்றில் சகல நோய் தீர்க்கும் திருத்துறையில் நீராடலும், பகல் 12 மணிக்கு அன்னதானமும், மாலை 5 மணிக்கு ஊஞ்சல் சேவையும், இரவு ஆலிலைச் சயன தரிசனமும் நடைபெறும்.