

உதகை, குன்னூர், நெல்லியாளம் மற்றும் கூடலூர் நகராட்சிகள், 11 பேரூராட்சிகள் மற்றும் 4 ஊராட்சி ஒன்றியங்கள் அடங்கிய 4 மண்டலங்களில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் உபயோகத்தை தவிர்ப்பது, பொது இடங்களில் குப்பை கொட்டுவதை தவிர்ப்பதுதொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்ன சென்ட் திவ்யாவின் உத்தரவின்படி மண்டல அலுவலர்களால் ஒட்டுமொத்த கள ஆய்வு நடத்தப்பட்டது.
இதையொட்டி, உதகை, குன்னூர், கூடலூர், கோத்தகிரி ஆகிய 4 மண்டலங்களில் நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிஒன்றிய அலுவலர்கள் மற்றும் துணை ஆட்சியர் நிலையிலான அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர். ஆட்சியர் கூறும்போது, “முகக்கவசம் அணியாதவர்களிடமிருந்து ரூ.1,700 அபராதம் வசூலிக்கப்பட்டது. மொத்தம் 13.400 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து ரூ.45 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
இனிவரும் காலங்களில் வியாபாரிகள், பொதுமக்கள், சுற்றுலா மற்றும் வெளியூர் பயணிகளும் தடை செய்யப்பட்ட குடிநீர் பாட்டில்கள், குளிர்பான பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை பொது இடங்களில் கொட்டுவதை தவிர்த்து, பயணிகள் நலனுக்காகநிறுவப்பட்டுள்ள குடிநீர் வழங்கும் இயந்திரத்தைப் பயன்படுத்தி, சுற்றுச்சூழலைப் பாதுகாக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என்றார்.