

திண்டிவனம் அருகே ஆலகிராமம் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு உள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் விழுப்புரம் ஆட்சியரிடம் நேரில் சென்று மனு அளித்தும் எவ்வித பலனும் இல்லை. அப்பகுதியில் நேற்று குடிநீர் விநியோகம் தடைபட்டது. இதனால் பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்திற்கு தொலைபேசி மூலம் புகார் தெரிவித்தனர்.
‘‘குடிநீர் தட்டுப்பாடு குறித்து மயிலம்வட்டார வளர்ச்சி அலுவலரிடம் தெரிவித்துள் ளோம். சிறிது நேரத்தில் சரி செய்யப்படும்’’ என ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் தெரி வித்தனர். நெடுநேரமாகியும் அதிகாரிகள் யாரும் வரவில்லை. இதனால் பொதுமக்கள் அவ்வழியே சென்ற அரசு பேருந்தை சிறை பிடித்து காலிக் குடங்களுடன் சாலையில் அமர்ந்தனர். தகவலறிந்த பெரியதச்சூர் போலீஸார் மற்றும் ஊராட்சி செயலாளர் நேரில் சென்று பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.பழுதடைந்த குடிநீர் தொட்டியை உடனே பழுது நீக்கம் செய்து, குடிநீர் விநியோகம் செய்து தர வேண்டும் என மக்கள் கூறினர். உடனடியாக சரி செய்வதாக அதிகாரிகள் கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில் 2 மணி நேரத்திற்கு பிறகு அரசு பேருந்தை விடுவித்தனர்.