

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயி லில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு 10 மாதங்களுக்கு பின் சுவாமி வீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
கரோனா பரவல் தடுப்பு ஊரடங்கால் ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயில் கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் மூடப்பட்டு பக்தர்கள் வரத் தடை விதிக்கப்பட்டிருந்தது.
பின்னர், செப்டம்பர் 1 முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய மட்டும் அனுமதிக்கப்பட்டனர். சுவாமி வீதி உலா நடத்தவும், கோயிலில் உள்ள தீர்த்தங்களில் பக்தர்கள் நீராடவும் அனுமதிக்கப்படவில்லை.
இந்நிலையில் நேற்று தைப்பூச தெப்பத்திருவிழாவை முன்னிட்டு ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு ஸ்படிக லிங்க பூஜை நடைபெற்றது.
காலை 10.30 மணிக்கு மேல் ராமேசுவரம் கோயிலில் இருந்து புறப்பாடாகி ராமநாத சுவாமி, பர்வதவர்த்தனி அம்பாள் தங்க ரிஷப வாகனத்தில் பஞ்ச மூர்த்திகளுடன் வீதி உலா வந்து லட்சுமனேஸ்வரர் தீர்த்தக் கோயிலில் எழுந்தருளினர். முன்னதாக சுவாமி, அம்பாள் புறப்பாடுக்குப் பின்னர் ராமநாத சுவாமி கோயில் நடை சாத்தப்பட் டது.
இரவில் லட்சுமணத் தீர்த்தத்தில் தெப்ப உற்சவம் முடிந்து பஞ்ச மூர்த்திகள் இரவு கோயிலை வந் தடைந்தனர்.
அப்போது மீண்டும் கோயில் நடை திறக்கப்பட்டு சுவாமி, அம்பாள் சன்னதி யில் அர்த்தஜாம பூஜை மற்றும் பள்ளியறை பூஜைகள் நடைபெற்றன.
சுமார் 10 மாதங்களுக்குப் பின் இக்கோயிலில் நேற்று சுவாமி வீதி உலா நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.