நாகர்கோவில், உவரி, கழுகுமலை கோயில்களில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம்

சிறப்பு அலங்காரத்தில் பாளையங்கோட்டை மேலவாசல் சுப்பிரமணிய சுவாமி  . படம்: மு.லெட்சுமி அருண்
சிறப்பு அலங்காரத்தில் பாளையங்கோட்டை மேலவாசல் சுப்பிரமணிய சுவாமி . படம்: மு.லெட்சுமி அருண்
Updated on
2 min read

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயில், உவரி சுயம்புலிங்க சுவாமி கோயில், நாகர்கோவில் நாகராஜா கோயிலில் தேரோட்டம் நேற்று நடந்தது.

நாகர்கோவிலில் உள்ள பிரசித்தி பெற்ற நாகராஜா கோயிலில் தைத்திருவிழா கடந்த 20-ம் தேதி கொடியேற்றத் துடன் தொடங்கியது.

9-ம் திருவிழாவான நேற்று தேரோட்டம் நடைபெற்றது. அதிகாலையில் நாகராஜா கோயிலில் இருந்து அனந்தகிருஷ் ணன், பாமாருக்மணியுடன் மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக வந்து தேரில் எழுந்தருளினார்.

பின்னர் சிறப்பு பூஜையை தொடர்ந்து காலை 7 மணி அளவில் தேரோட்டம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். தேர் நாகராஜா திடலின் நான்குரத வீதிகள் வழியாக வலம் வந்தது. பக்தர்கள் வழிநெடுக மலர் தூவி வழிபாடு செய்தனர்.

தேரோட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதா கிருஷ்ணன், சுரேஷ்ராஜன் எம்எல்ஏ, கோயில்களின் இணை அணையர் அன்புமணி, அறங்காவலர்குழுத் தலைவர் சிவகுற்றாலம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இரவில் சப்தாவர்ணம் நிகழ்ச்சி நடைபெற்றது. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். நிறைவு நாளான இன்று மாலை 6 மணிக்கு சுவாமிக்கு ஆராட்டும், பின்னர் சுவாமி கோயிலில் எழுந்தருளும் வைபவமும் நடைபெறுகிறது.

உவரி

இக்கோயிலில் 10 நாட்கள் நடைபெறும் தைப்பூச திருவிழா கடந்த 20-ம் தேதி சிறப்பு பூஜை மற்றும் கொடிப்பட்டம் ஊர்வலத்துடன் தொடங்கியது.

தொடர்ந்து விழா நாட்களில் தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன. விழாவில் 9-ம் நாளான நேற்று காலையில் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது.

கழுகுமலை

நேற்று தேரோட்டம் நடந்தது. அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. திருவனந்தல் பூஜை, திருப்பள்ளி எழுச்சி பூஜை நடந்தது. சுவாமி கழுகாசலமூர்த்தி மற்றும் அம்பாள்கள் தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி காலை 8 மணிக்கு நடந்தது. 9 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது.

கோ ரதத்தில் விநாயகப் பெருமான் முன் செல்ல, சட்ட ரதத்தில் உற்சவர் மூர்த்தியுடன் வள்ளி, தெய்வானை தேரில் பவனி வந்தனர். தொடர்ந்து சுவாமி, அம்பாள்களுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.

பின்னர், கோயிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

இரவு 8 மணிக்கு இந்திர வாகனத்தில் சுவாமி வீதியுலா நடைபெற்றது.

வெங்கடாஜலபதி கோயிலில் வருஷாபிஷேகம்

கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரா வளாகத்தில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான வெங்கடாஜலபதி கோயிலில் கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி 27-ல் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகம் முடிந்து 3-வது ஆண்டு தொடங்குவதை முன்னிட்டு வருஷாபிஷேகம் நேற்று முன்தினம் நடைபெற்றது.

இதையொட்டி சுப்ரபாத சேவை, அஷ்டோத்ர பூஜை மற்றும் 108 கலச பூஜை நடைபெற்றது. வெங்கடாஜலபதி மற்றும் தேவி, பூதேவி உற்சவ மூர்த்திகளுக்கு திருமஞ்சனம், அலங்காரம் செய்து தீபாராதனை நடைபெற்றது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in